மே.வங்க மருத்துவமனையில் மேலும் 12 குழந்தைகள் சாவு-4 நாட்களில் 25 குழந்தைகள் பலி
பர்த்வான்: கொல்கத்தாவில் உள்ள பிசி ராய் மருத்துவமனையில் 3 நாட்களில் 13 குழந்தைகள் இறந்துள்ள நிலையில் பர்த்வான் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 பிறந்த குழந்தைகள் இறந்துள்ளன. இதனால் மேற்கு வங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பர்த்வானில் உள்ள பர்த்வான் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 1 முதல் 3 நாட்களான 12 குழந்தைகள் இறந்துள்ளன.
இது குறித்து மருத்துவமனை அதிகாரி தபஸ் குமார் கோஷ் கூறியதாவது,
நேற்றில் இருந்து 12 பிறந்த குழந்தைகள் இறந்துள்ளன. அந்த குழந்தைகள் மிகவும் குறைந்த எடையில் தான் பிறந்தன. பிறந்து 1 முதல் 3 நாட்களான அந்த குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை மற்று மூளை வீக்கம் இருந்தது. இந்த இறப்புகள் குறித்து யாரும் மருத்துவமனை மீது புகார் கொடுக்கவில்லை. அந்த குழந்தைகள் பிறக்கும் போதே மோசமான நிலையில் தான் பிறந்தன.
மருத்துவர்கள் குழந்தைகளை காப்பாற்ற தங்களால் முடிந்ததை எல்லாம் செய்தனர், இருந்தும் பலனில்லை. இந்த மருத்துவமனையில் 60 படுக்கைகளில் 160 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றன. கூடுதல் ஊழியர்களும், உபகரனங்களும் தேவை என்றார்.
கடந்த 25, 26, 27 ஆகிய தேதிகளில் கொல்கத்தாவில் உள்ள பிசி ராய் மருத்துவமனையில் 13 குழந்தைகள் இறந்தன. இந்நிலையில் தற்போது மேலும் 12 பிறந்த குழந்தைகள் இறந்துள்ளது மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications