தொடர் மழையால் விறுவிறுவென்று நிரம்பும் ஏரிகள்: சென்னையில் குடிநீர் தட்டுபாடு இருக்காது
சென்னை: தொடர் மழை காரணமாக சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள் அதிவேகமாக நிரம்பி வருவதால் இந்தாண்டு சென்னையி்ல் குடிநீர் தட்டுபாடு ஏற்பட வாய்ப்பே இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கையில் இருந்து ஆந்திரா வரை மத்திய மேற்கு வங்ககடலில் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனால் அடுத்த 24 மணிநேரத்துக்கு கடலோர மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த 6 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் நிலவரப்படி புழல் ஏரியில் 3133 மில்லியன் கனஅடியாக தண்ணீர் இருந்தது. ஏரியின் கொள்ளளவு 3300 மில்லியன் கன அடியாகும். புழல் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தற்போது ஏரிக்கு 716 கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் ஏரியில் இருந்து 380 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியில் 2,703 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி. இங்கு 31 மி.மீ மழை பெய்துள்ளதால் ஏரிக்கு 474 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து 150 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
3231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் தற்போது 2651 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 735 கனஅடி தண்ணீர் வருகிறது. 568 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதில் பாதி தண்ணீர் சோழவரம் ஏரிக்கு திருப்பி விடப்படுகிறது.
பூண்டி ஏரிக்கு 418 கன அடி கிருஷ்ணா நீரும் வருவதால் ஏரி இன்னும் 1 வாரத்தில் நிரம்பும் நிலையில் உள்ளது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 881 மில்லியன் கன அடியாகும்.இதில் தற்போது 631 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 394 கனஅடி தண்ணீர் வருகிறது.
கடலூரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 1465 மில்லியன் கனஅடி. தற்போது 687 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. 250 கன அடி தண்ணீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. 272 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. 40 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
மழை தொடர்ந்து நீடித்தால் இன்னும் 1 வாரத்தில் ஏரிகள் அனைத்தும் நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு முன்கூட்டியே ஏரிகள் நிரம்பி வருவதால் இந்தாண்டு சென்னையில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட வாய்ப்பில்லை என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications