சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தலில் மதிமுக போட்டி: வைகோ

இந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அதிமுக அமைச்சராக இருந்த கருப்பசாமி சமீபத்தில் மறைந்ததையடுத்து இடைத் தேர்தல் நடக்கவுள்ளது.
இந் நிலையில் மதுரை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் புதூர் பூமிநாதனின் மகள் திருமணம் இன்று மதுரை சொக்கிகுளம் பி.டி.ஆர். திருமண மண்டபத்தில் நடந்தது. அகசில் பங்கேற்ற வைகோ நிருபர்களிடம் பேசுகையில், சங்கரன்கோவில் தொகுதியில் மதிமுக போட்டியிடும்.
சென்னையில் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை டிபிஐ வளாகத்துக்கு மாற்றும் முடிவு தவறானது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
பின்னர் திருமண விழாவில் வைகோ பங்கேற்றார். இந்தத் திருமண விழாவில்
திமுகவின் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி, மதுரை நகர் மாவட்ட செயலாளர் தளபதி உள்ளிட்ட ஏராளமான திமுக பிரமுகர்களும் பங்கேற்றனர்.
திருமண விழாவில் வைகோ பேசுகையில், இந்த விழாவில் திமுக மாவட்டச் செயலாளர்களும் மணமக்களை வாழ்த்தி சென்று உள்ளனர். அரசியல்ரீதியாக எந்த விமர்சனமும் செய்ய விரும்பவில்லை. ஏனென்றால் விமர்சனம் எழும்பும் இடத்திற்கு நீங்கள் ஏன் சென்றீர்கள் என்று அவர்களிடம் யாரும் கேட்டு விடக்கூடாது.
ஆனால் பழைய ஞாபகம் நிழலாடுகிறது. 36 ஆண்டுகளாக பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் ஒரே அரசியல் தலைவன் நான். அதுபோல் தான் கடந்த 1992ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி நான் பெரிதும் மதிக்கக்கூடிய முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் காளிமுத்து, தா.கிருஷ்ணன், கா.சுப்பு, சுப.தங்கவேலன் ஆகியோரெல்லாம் பசும்பொன் சென்று விட்டு கமுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினோம்.
அதே நினைவுடன் 1993ம் ஆண்டு என்னை அழைப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. அக்டோபர் 3ம் தேதி என் தலைக்கு மேல் கத்தி தொங்கும் என்பது எனக்கு தெரியாமல் போய்விட்டது.
பசும்பொன்னுக்கு நானே வருகிறேன் என்று அப்போது நான் சார்ந்து இருந்த கட்சியின் தலைவரே (கருணாநிதி) வந்தார். இந்நிலையிலும் ஆயிரக்கணக்கான வாகனத்தில் தோழர்களுடன் சென்று பசும்பொன்னில் அஞ்சலி செலுத்தி விட்டு காரியாபட்டி பொதுக்கூட்டத்தில் பேசினேன்.
1993ம் ஆண்டு கோவையில் நடந்த திமுக மாநாட்டில் பேசியதுதான் அந்தக் கட்சியில் நான் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சியாகும். இதையெல்லாம் எனது மலரும் நினைவாக தெரியப்படுத்தினேன்.
விழாவில் பேசியவர்கள் மதிமுக உயர்ந்த இடத்துக்கு, உயர்ந்த பதவிக்கு வரும் என்று பேசினார்கள். மதிமுக வீழவில்லை. மதிமுகவுக்கு வீழ்ச்சி இல்லை, மதிமுகவை யாரும் வீழ்த்த முடியாது.
சட்டமன்றப் பதவியோ, நாடாளுமன்றப் பதவியோ, மந்திரி பதவியோ மதிமுகவின் இலக்கு அல்ல. ஆனால் நாங்கள் துறவிகளும் அல்ல. பதவிகளை கருவியாக கொண்டு தமிழகத்தை முன்னேற்ற வேண்டும்.
மதிமுகவிடம் பண வசதி இல்லை. என்னிடமும் பணம் கிடையாது. ஆனால் ஏழைகள் கண்ணீருக்கு முன்பாக கரன்சிகளை காகிதமாக பார்ப்பவன் நான். அந்த வகையில் நான் பரமக்குடி துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிய மாணவர் ஜெயபிரசாத்தின் உயிரை காப்பாற்ற அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை பெற்று தந்தேன்.
இன்று பெரியார் இல்லை, அறிஞர் அண்ணா இல்லை. தமிழகம் அனைத்து துறைகளிலும் பாழ்பட்டு கிடக்கிறது. முல்லைப் பெரியாறு, கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட் ஆலை இப்படி பல்வேறு தரப்பிலும் தமிழக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் எதிர்காலத்தை காக்கும் கடமை மதிமுவுக்கு உண்டு.
கடந்த 1996ம் ஆண்டு சோதனையில் இருந்து மதிமுக மீண்டது. 2001ல் தனித்து போட்டியிட்டோம். 2011ல் மதிமுக தேர்தலைப் புறக்கணித்தது. தேர்தலிலே போட்டியிடாத மதிமுக அஸ்தமித்து விட்டது என்றார்கள். மதிமுக ஒருபோதும் அஸ்தமிக்காது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டிருந்தால் 12 எம்.எல்.ஏக்கள் வந்திருக்கலாம். ஆனால் தேர்தலை புறக்கணித்ததால் கட்சிக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது. சில நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டார்கள். சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை. நான் அவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. மதிமுக தொண்டர்கள் கட்சியின் முடிவை ஏற்று கொண்டார்கள்.
மரண விளிம்பில் தவிக்கும் 3 தமிழர்களை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற மதிமுக எடுக்கும் நடவடிக்கையை தமிழகம் மட்டுமல்ல, உலகத்தில் வாழும் தமிழர்கள் அனைவரும் வாழ்த்துகிறார்கள்.
இந்த நேரத்தில் மக்களுக்கு பணியாற்ற மதிமுக நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும். பணியாற்ற முடியாதவர்கள் பொறுப்புகளை பணியாற்ற விரும்புபவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
விரைவில் தமிழக மக்கள் மதிமுகவிற்கு வெற்றி மகுடம் சூட்டுவார்கள். அந்த நாள் வரும் என்றார்.












Click it and Unblock the Notifications