மழையால் பல்லாங்குழியான சென்னை மாநகர சாலைகள் – வாகன ஓட்டிகளுக்கு சவால்

வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டது போலவே அக்டோபர் இறுதி வாரத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை. விடாது பெய்த கனமழையால் வெள்ளக்காடானது சென்னை மாநகரம். சாலைகளில் வெள்ள நீர் தேங்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சரியாக போடப்படாத சாலைகளால் ஒரு மழைக்கே பல் காட்டும் பல்லாங்குழி சாலைகள் கனமழைக்கு தாங்குமா?. ஆங்காங்கே பெயர்ந்து கடுமையான பள்ளங்கள் உருவாகியுள்ளன. வியாசர்பாடி, எழும்பூர், தியாகராயநகர், கிண்டி உள்ளிட்ட இடங்களிலும் சாலைகள் படுமோசமான நிலையை அடைந்துள்ளன. குண்டும், குழியுமான சாலைகளில் தினமும் வாகனம் ஓட்டிச்செல்வது வாகன ஓட்டிகளுக்கு சவாலான பணியாகவே உள்ளது.
பேருந்துநிலையங்களின் கதி
சாலைகளின் கதிதான் இப்படி என்றால் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் என்ற பெருமையை பெற்ற சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வெள்ளநீரில் மிதக்கிறது. இதனால் பேருந்து நிலையத்தில் சகதி உருவாகி பேருந்துகள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியுள்ளன.
இதனால் பக்ரீத் விடுமுறைக்கு வெளியூர் சென்ற பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இதேபோல் முகப்பேர் பேருந்து நிலையம் கடுமையான சகதிக்குள் சிக்கியுள்ளது. பத்து நாட்களாக பெய்த கனமழைக்கு பேருந்து நிலையமே சிதைந்து போயுள்ளது. இதனால் கால் வைக்கவே அஞ்சும் பயணிகள் முகப்பேர் பேருந்து நிலையத்தில் கான்கிரீட் சாலைகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதே நிலைதான் குரோம்பேட்டை பேருந்து நிலையம், தாம்பரம் உள்ளிட்ட புறநகர்களில் உள்ள பெரும்பாலான பேருந்து நிலையங்களில் காணப்படுகிறது. பல்லாவரம் பேருந்து நிலையமும் மக்களை முகம் சுளிக்க வைப்பதாகவே உள்ளது.
குரோம்பேட்டை பகுதியில் எப்போது மழை பெய்தாலும் மக்கள் நீந்தியபடிதான் செல்ல வேண்டியுள்ளது. அது சின்ன மழையோ, பெரிய மழையோ, மழை என்று வந்து விட்டால் குரோம்பேட்டை குட்டி நீச்சல் குளமாகி விடுகிறது. சாலையோரமாக உள்ள காவல் நிலையத்தையும் மழை நீர் விடுவதில்லை, உள்ளே போய் ஒரு வழி பண்ணி விடுகிறது. எதற்குமே அஞ்சாத குரோம்பேட்டை போலீஸார், மழை வந்து விட்டால் நடுங்கிப் போய் விடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
வடிகால் வசதி இல்லை
சென்னையின் முக்கிய பகுதிகளில் மழைநீர் வடிகால்களை சீரமைக்காததாலும், சாலைகளில் பல இடங்களில் பள்ளம் தோண்டி அவற்றை மூடாமல் அப்படியே விட்டதாலும் மழை நீர் தேங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
மழைக்காலம் வரும் முன்னரே மழைநீர் வடிகால்கள் மற்றும் கழிவுநீர் பாதைகளில் இருந்த அடைப்பை முறையாக நீக்கியிருந்தால், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்பில்லை. எனவே உடனடியாக பழுதான சாலைகளை சீரமைப்பதும், சரியான வடிகால் வசதி ஏற்படுத்துவதும் சென்னை மாநகராட்சி மேயரின் முன்பு உள்ள சவாலாகும்.












Click it and Unblock the Notifications