'எஸ்கேப்' அமைச்சர் கல்யாணசுந்தரம் இன்றும் 'டிமிக்கி'-நவ.25ல் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
திண்டிவனம்: பத்தாம் வகுப்புத் தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாண சுந்தரம் இன்றும் கோர்ட்டில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்தார். அவர் வரும் 25-ம் தேதி ஆஜராகவேண்டும் என்று திண்டிவனம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10ம் வகுப்பு தேர்வை தனக்குப் பதில் வேறு ஒருவரை விட்டு எழுதியதாக புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாண சுந்தரத்தின் மீது விழுப்புரம் போலீஸில் புகார் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து கல்யாண சுந்தரத்தை கைது செய்ய விழுப்புரம் போலீஸ் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் கல்யாண சுந்தரம் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த திண்டிவனம் நீதிமன்றம் கல்யாண சுந்தரத்தை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்நிலையில் அவரது முன்ஜாமீன் மனு செவ்வாய்கிழமை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பழனிவேலு, கல்யாண சுந்தரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்.
இதனையடுத்து போலீசாரால் கைது செய்யப்படலாம் என்று அஞ்சிய கல்யாண சுந்தரம் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார். இந்தநிலையில் புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாண சுந்தரம் வெள்ளிக்கிழமை திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று கூறப்பட்டது.
இதனையடுத்து அவர் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது சார்பாக ஆஜரான அவரது வழக்கறிஞர், புதுவை கல்வி அமைச்சர் ஊரில் இல்லை எனவே அமைச்சரால் இன்று ஆஜராக இயலவில்லை எனவே மற்றொரு நாளில் அவர் ஆஜராவார் என்று கூறினார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அந்த நாளில் அமைச்சர் கல்யாணசுந்தரம் கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications