பாமக நிர்வாகி கொலைக்கு பழிக்குப்பழி: கூட வந்த பாவத்திற்காக வெட்டுப்பட்ட ஆறுமுகம்
மதுரை: பாமக நிர்வாகி கொலைக்குப் பழிக்குப்பழி வாங்குவதற்காக வெட்டப்பட்டவர்களில் ஆறுமுகம் என்பவருக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. கொலை வழக்கில் தொடர்புடயைவர்களுடன் ஆட்டோவில் வந்த ஒரே காரணத்திற்காக அவரும் வெட்டப்பட்டார்.
மதுரை வில்லாபுரத்தில் நேற்று நடந்த இரட்டைக் கொலை மதுரை மக்களை பெரும் பதைபதைப்புக்கு ஆளாக்கி விட்டது. இதேபோன்ற ஒரு கோரக் கொலையை பல ஆண்டுகளுக்கு முன்பு லீலாவதி என்ற பெண் கவுன்சிலரின் ரூபத்தில் அவர்கள் பார்த்து அதிர்ந்தனர். நேற்று நடந்ததைப் போலத்தான் பெண் கவுன்சிலர் லீலாவதியும் மிகக் கோரமாக கொல்லப்பட்டார்.
அதே வில்லாபுரத்தில் நேற்று நடந்து விட்ட இரட்டைக் கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் இளஞ்செழியன். பாமக மாநில துணை பொதுச் செயலாளராக இருந்தவர். அவர் கடந்த மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி அன்று இளஞ்செழியனை எஸ்.எஸ்.காலனியில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே வைத்து சிலர் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவனியாபுரம் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த மகாகனி (49), கருப்புச்சாமி (48), அம்பேத்கர் (25), சிற்றரசு உள்பட 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் அனைவரும் கடந்த 3ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தனர்.
சிற்றரசு உள்பட 5 பேர் அவனியாபுரம் காவல் நிலையத்திலும், மகாகனி, கருப்புச்சாமி, அம்பேத்கர் உள்பட 6 பேர் எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திலும் தினமும் காலை கையெழுத்து போட்டு வந்தனர்.
மகாகனி, கருப்புச்சாமி, அம்பேத்கர் ஆகியோர் வழக்கம் போல நேற்று காலை 10 மணிக்கு எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தி்ல் கையெழுத்து போட்டுவிட்டு ஒரு ஆட்டோவில் வீட்டுக்கு புறப்பட்டனர்.
ஆட்டோ வில்லாபுரம் மீனாட்சி நகர் 4வது தெரு அருகே உள்ள மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கார் ஆட்டோவை வழி மறித்தது. உடனே காரில் இருந்து 10 பேர் பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோவை நோக்கி வந்தனர். அவர்கள் ஆட்டோவில் இருந்த மகாகனி, ஆறுமுகம் என்கிற கபாலி (24), கருப்புச்சாமி, அம்பேத்கர் ஆகியோரை சரமாரியாக வெட்டினர்.
வெட்டுக் காயங்களுடன் அவர்கள் உயிருக்கு பயந்து ஓடினர். ஆனால் அந்த கும்பல் அவர்களை பட்டப்பகலில் நடுத்தெருவில் ஓட, ஓட விரட்டி வெட்டியது. இதில் படுகாயமடைந்த 4 பேரில் கருப்பசாமி மட்டும் அருகில் உள்ள ஒரு கோவிலுக்குள் ஓடிவிட்டார் மற்ற 3 பேர் மயங்கிவிட்டனர். அதன் பிறகு அந்த கும்பல் காரில் ஏறி தப்பித்துவிட்டது.
மகாகனியின் இடது கை துண்டாகி அங்கிருந்த சாக்கடையில் விழுந்து கிடந்தது. ஆறுமுகத்திற்கு நெற்றி உள்பட 5 இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன. கருப்புச்சாமிக்கு வலது மணிக்கட்டு உள்ளிட்ட இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன. இந்த சம்பவம் நடந்த இடத்தில் அந்த 4 பேரின் சதைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது. அவர்கள் வந்த ஆட்டோ ரத்தக் காடாக இருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆறுமுகம், கருப்புச்சாமி, மகாகனி ஆகிய 3 பேரையும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மகாகனி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவனியாபுரம் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் இளஞ்செழியனின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க கூலிப்படையை ஏவி இந்த படுபாதகச் செயல் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிய வந்துள்ளது.
அந்த 3 பேருடன் ஆட்டோவில் வந்த ஒரே காரணத்திற்காக ஆறுமுகம் தாக்கப்பட்டுள்ளார். இளஞ்செழியன் கொலைக்கும், அவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது போலீசார் தெரிவித்தனர். கொலக் கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications