நீக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை இன்றைக்குள் சேர்க்க உயர்நீதிமன்றம் உதத்ரவு
சென்னை: ஜெயலலிதாவால் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் 12600 பேரையும் இன்றைக்குள் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் அவரால் நியமிக்கப்பட்டவர்கள் மக்கள் நலப் பணியாளர்கள். மொத்தம் 13,000 பேரை அவர் நியமித்திருந்தார்.
இவர்களில் சுமார் 12,600 ஆயிரம் பேர் பணியிலிருந்து வந்தனர். ஜெயலலிதா பதவி ஏற்றதும் இவர்களுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்தினார். இரு வாரங்களுக்கு முன்பு மொத்த பணியாளர்களையும் நீக்கி உத்தரவிட்டார்.
அரசின் இந்த முடிவுக்கு எதிராகவும், மக்கள் நல பணியாளர்கள் நீக்கத்தை ரத்துச் செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மக்கள் நல பணியாளர் சங்கம் வழக்கு தொடர்ந்தது.
தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் எம்.பழனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மக்கள் நல பணியாளர்கள் நலச் சங்கத் தலைவர் என்.செல்லபாண்டியன் ஆகியோர் கடந்த வாரம் தாக்கல் செய்த மனுவில், எங்கள் சங்க உறுப்பினர்கள் திடீரென்று பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அரசியல் அமைப்பு சாசனம் கொடுத்துள்ள எங்களுக்கான வாழ்வுரிமை பாதிக்கப்படுகிறது. எங்களின் வாழ்வாதாரம் போய்விடும். குடும்பம் வறுமைக்கு ஆளாகிவிடும். எனவே அரசு உத்தரவை ரத்து செய்து எங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கை கடந்த 11ம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுகுணா, மக்கள் நல பணியாளர்கள் நீக்கத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் தங்கள் பணியில் தொடர அனுமதி அளித்தும் அவர் உத்தரவிட்டார். இந்த இடைக்காலத் தடை, மனுதாரர் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தனது உத்தரவில் கூறியிருந்தார்.
மேலும், அந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் சார்பில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை செயலாளர் பழனியப்பன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில்,
இந்த சங்கங்களில் சுமார் 13,000 பேர் உறுப்பினர்களாக இருப்பதாக மனுதாரர்கள் கூறுவதில் உண்மை இல்லை. அது தவறான தகவலாகும். இந்த சங்கங்களில் உறுப்பினராக சேர்வதற்கு 14.11.11. வரை 29 பேர் மட்டுமே விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளனர்,
இந்த உறுப்பினர்களின் விண்ணப்பங்களில் உள்ள 'என்ன தொழில்' என்ற பகுதியில், தனியார் நிறுவனங்களில் பணி', தனிப்பட்ட தொழில்' என்று கூறியுள்ளனர். இவற்றை பார்க்கும்போது, இந்த உறுப்பினர் சேர்க்கை, பராமரிப்புப் பணியில் இந்த சங்கங்கள் முறையாகவும் சட்டத்தின் அடிப்படையிலும் செயல்படவில்லை என்பது தெளிவாகிறது.
தமிழ்நாடு பதிவுகள் சட்டப்படி, அந்த சங்கங்கள் ஆண்டறிக்கையையும், வரவு செலவுக்கணக்கையும் தாக்கல் செய்யவில்லை. எனவே சட்டப்படி பார்த்தால், இந்த சங்கங்கள் எதுவுமே செயல்பாட்டில் இல்லை என்றே அர்த்தம்.
எனவே சங்கங்கள் என்று சொல்லிக் கொண்டு செயல்படாத இந்த சங்கங்கள் மனு தாக்கல் செய்ததே தவறு. எனவே அந்த சங்கங்களின் மனுக்களை விசாரணைக்கே எடுக்கக்கூடாது. அவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும்.
மக்கள் நலப் பணியாளர்கள் சட்டவிரோதமாகவும், விதிமுறைகளுக்கு முரணாகவும் நியமனம் செய்யப்பட்டதால்தான் அவர்களை பணிநீக்கம் செய்தோம்.
அவர்களுக்கென்று குறிப்பிட்ட பணி எதுவும் வழங்கப்படவில்லை. அவர்கள் பணி, ஒப்பந்த அடிப்படையிலானது. அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவோ, அல்லது வேறு பணியாளர் தேர்வு அமைப்புகள் மூலமாகவோ அவர்கள் நியமிக்கப்படவில்லை.
அவர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு, நியமன நடைமுறை போன்றவை பின்பற்றப்படவில்லை. உச்ச நீதிமன்றம் விதித்த விதிமுறையின்படியோ, அல்லது சட்டங்களின் அடிப்படையிலோ இல்லாமல் அவற்றுக்கு முரணாக நியமனம் செய்யப்பட்டதால்தான் அவர்கள் நீக்கப்பட்டனர்.
இவ்வாறு அரசு தனது மனுவில் கூறியிருந்தது.
மக்கள் நலப் பணியாளர்கள் சார்பில் சங்கம் சார்பில் வழக்கறிஞர் வைகை ஆஜரானார். அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுகுணா பிறப்பித்த உத்தரவில்,
ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவுப்படி, உயர் நீதிமன்ற பதிவகத்தில் 12ம்ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்டியலில் சங்க உறுப்பினர்கள் யார் யாரின் பெயர் உள்ளதோ, அவர்கள் அனைவருக்கும் உடனடியாக மக்கள் நலப்பணியாளர் என்ற பணியை மீண்டும் வழங்க வேண்டும்.
இவர்களில் யாரெல்லாம் உறுப்பினர்கள் இல்லை என்பதை அரசு நிரூபிக்கும் வரை, இடைக்கால உத்தரவின்படி அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட வேண்டும்.
சிலரது பெயர்களை பதிவகத்தில் சேர்க்காமல் விட்டுவிட்டதாக மக்கள் நலப் பணியாளர் சங்கங்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்களின் பெயரை 22ம் தேதி (இன்று) மாலை 4 மணிக்குள் பதிவகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அந்தப் பட்டியலை அட்வகேட் ஜெனரல் அலுவலகத்திலும் கொடுக்க வேண்டும்.
பெயர் விடுபட்ட இவர்களுக்கு இடைக்கால உத்தரவு பொருந்தாது. இவர்கள் நியமனம் பற்றி இறுதி உத்தரவில் முடிவு செய்யப்படும்.
இந்த உத்தரவை அரசு பின்பற்றியது பற்றிய அறிக்கையை 23ம்ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை 24ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications