For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழருக்கு தொடர்ந்து துரோகமிழைக்கும் மத்திய அரசு! - வைகோ

By Shankar
Google Oneindia Tamil News

Vaiko
சென்னை: கடலோரக் காவல்படையின் நடவடிக்கையின்மூலம் தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு செய்துவரும் துரோகம் வெளியில் தெரியவந்துள்ளது என மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

தங்களுக்கு உரிமையுள்ள கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அனுபவித்து வருகின்ற மீன்பிடிக்கும் உரிமையின்படி தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போதெல்லாம், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கொடூரமாக தாக்குவதும், ஆடைகளைப் பறித்து சித்ரவதை செய்து கடலில் வீசுவதும், சுட்டுக்கொல்வதும் வாடிக்கையாகி விட்டது.

இதுவரை தமிழக மீனவர்கள் 600 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் இப்படி கொல்லப்பட்டதற்கு தமிழகத்திலே இருந்து பலத்த கண்டனம் எழுந்தும், இந்தியாவின் மத்திய காங்கிரஸ் அரசு கிஞ்சிற்றும் அதனை பொருட்படுத்தவில்லை. இப்போது குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்ததாம் என்பதுபோல, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இந்தியாவின் கடலோரக் காவல்படை ஒரு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளது. தமிழக மீனவர்களை குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை மீனவர்கள் மீன் பிடிப்பதாகவும், இலங்கை தடை செய்த மீன் வலைகளைப் பயன்படுத்துவதாகவும் அபாண்டமான புகாரைச் சொல்லியுள்ளது.

சர்வதேச கடல் எல்லையில் இருந்து நமது கடல்பகுதியின் ஐந்து கடல் மைல் தூரத்தை மீன் பிடி தடை மண்டலமாக தமிழ்நாடு அறிவிக்க வேண்டுமென்றும் இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளது. தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டபோதும், சுட்டுக் கொல்லப்பட்டபோதும் ஒருமுறை கூட நம் மீனவர்களை பாதுகாக்க இந்திய கடலோர காவல்படை எந்த நடவடிக்கையும் எடுத்தது கிடையாது. பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் புகார் கொடுக்கச் சென்றபோதெல்லம் அவர்களை அவமானப்படுத்தி அடித்து விரட்டியது.

இதனுடைய பின்னணியை தமிழக மக்கள் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும். 2004 ஆம் ஆண்டு டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் இந்தியாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்த பிறகுதான், இலங்கை கடற்படையின் அட்டூழியம் அதிகமாகியது.

2004 செப்டம்பர் 16 ஆம் தேதி இலங்கைக்குச் சென்ற இந்திய கடற்படை தளபதி அருண்பிரகாஷ் தமிழக மீனவர்களுக்கு எதிராகவும், சிங்கள அரசுக்கு ஆதரவாகவும் விடுதலைப் புலிகளை கண்டனம் செய்தும், சிங்கள அரசின் விருந்தாளியாக கொழும்பில் கூறியதைக் கண்டித்து செப்டம்பர் 18 ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து, கடிதம் மூலமாகவே தெரிவித்தேன்.

தொடர்ந்து இந்திய கடற்படை தளபதிகள் இலங்கைக்குச் சென்று தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு நடத்திய இனக்கொலை யுத்தத்திற்கு உதவியாக ஆலோசனை வழங்கி வந்தனர்.

2007 ஆம் ஆண்டில் இந்திய - இலங்கை கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தைச் செய்துகொண்டு நேரடியாகவே தமிழின அழிப்பு யுத்தத்திற்கு இலங்கைக்கு பலவகையிலும் உதவி செய்தனர். விடுதலைப் புலிகளோடு நடத்திய யுத்தத்தில் இந்திய கடற்படை உதவியினால்தான் நாங்கள் வெற்றி பெற முடிந்தது என்றும், விடுதலைப் புலிகளின் கப்பல்களை மூழ்கடித்தோம் என்றும் இலங்கை கடற்படை துணைத் தளபதி தம்பட்டம் அடித்தான்.

இந்திய கடல் எல்லையில் இலங்கைக் கடற்படையினர் கடலுக்குள் கண்ணி வெடிகளை வைக்க இந்திய அரசு அனுமதித்தது என்பது உலகத்தில் எந்த நாடும் தன்னுடைய இறையாண்மையை காவு கொடுக்க முன்வராத அயோக்கியத்தனமான செயலாகும்.

இந்திய கடற்படை இலங்கைக்கு இப்படி உதவி வருவதனால்தான் கடலோர காவல்படை இவ்வளவு மமதையோடு தமிழக மீனவர்களுக்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் பிரமாண வாக்குமூலத்தை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

சோனியா காந்தி இயக்குகிற இந்தியாவின் மத்திய அரசு இலங்கையில் சிங்களவர் நடத்திய ஈழத்தமிழர் படுகொலை யுத்ததில் உதவி செய்து பங்கேற்ற துரோகத்தின் தொடர்கதையாகத்தான் கடலோர காவல்படை இப்பொழுது செயல்படுகிறது. மத்திய அரசினுடைய போக்கைத்தான் அது பிரதிபலிக்கிறது.

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்ற பழமொழிக்கேற்ப தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு செய்துவரும் துரோகம் இதன்மூலம் மேலும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அதனால்தான் இந்திய கடலோர காவல்படை சிங்கள அரசின் கூலிப் படையாக செயல்படுகிறது.

ஏற்கனவே வேல்பாய்ந்த தமிழர்களின் உள்ளத்தில் சூட்டுக்கோலைத் திணிக்கும் வகையில் இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. கடலோர காவல்படை தன் பிரமாண வாக்குமூலத்தை திரும்பப் பெற ஆணையிடுவதோடு, கண்டனமும் தெரிவிக்க மத்திய அரசு முன்வரவேண்டும்.

இல்லையேல் தாய்த் தமிழகத்திலுள்ள தமிழர்கள் உள்ளத்தில் மேலும் மேலும் வேதனையையும் வெறுப்பையும், இந்திய அரசின் மீது நம்பிக்கையின்மையையும் விதைக்கின்ற குற்றச் சாட்டுக்கும் அதன் எதிர்கால விளைவுகளுக்கும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுதான் பொறுப்பாகும் என எச்சரிக்கிறேன்.

-இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

English summary
MDMK supremo Vaiko blasting Union govt for betraying Tamils continuously. In his statement he mentioned that the latest affidavit submitted by Indian Navy against Tamil fishermen is the best example for India's betrayal to Tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X