மோட்டார் ஆப்பரேட்டர், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு 6 மாத சம்பள பாக்கி- சிஐடியு கண்டனம்
மதுரை: ஊராட்சிகளில் மோட்டார் ஆப்பரேட்டர், துப்புரவுத் தொழிலாளர்களுக்கான 6 மாத சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும் என்று தமிழக அரசை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் கே.ஆர்.கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
தமிழகத்தில் 12,620 ஊராட்சிகள் உள்ளன. இதில் மோட்டார் ஆப்பரேட்டர், துப்புரவுத் தொழிலாளர்களாக சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது உடனே உள்ளாட்சித் தலைவர்களுக்கான செக் பவர் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பெரும்பாலான ஊராட்சிகளில் மோட்டார் ஆப்பரேட்டர், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தர வேண்டிய சம்பளம் வழங்கப்படவில்லை. தேர்தல் முடிந்து புதிய தலைவர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில் இதுவரை இந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.
எனவே, தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனே தலையிட்டு மோட்டார் ஆப்பரேட்டர், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு சம்பளப் பாக்கிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சம்மேளனம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.
தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று அந்த அறிக்கையி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications