முல்லைப் பெரியாறு: கேரள குழுவைச் சந்தித்த பின் அதிமுக எம்.பிக்களை சந்தித்த பிரதமர்
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள எம்.பிக்கள் பல நாட்களாக டெல்லியில் பிரச்சினை எழுப்பி வரும் நிலையில், இன்று அதிமுக எம்.பிக்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள எம்.பிக்கள் கடும் லாபி செய்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக நாடாளுமன்றத்தில் அவர்கள் செய்து வரும் லாபிக்குப் போட்டியாக தமிழக எம்.பிக்கள் பதிலடி கொடுக்கவில்லை என்பதே உண்மை.
திமுக எம்.பிக்கள் பிரதமரை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்ததோடு நின்று விட்டனர். இந்த நிலையில் இன்று அதிமுக எம்.பிக்கள் தம்பித்துரை தலைமையில் பிரதமரைச் சந்தித்து மனு அளித்தனர்.
கேரள முதல்வர் உம்மன் சாண்டி வந்து சந்தித்து விட்டுப் போன பின்னர் அதிமுக குழுவை பிரதமர் சந்தித்தார். 20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது கேரள அரசின் பொய்ப் பிரசாரத்தையும், தேவையில்லாமல் பீதியைக் கிளப்பும் போக்கையும் கண்டித்து பிரதமரிடம் அதிமுக எம்.பிக்கள் மனு கொடுத்தனர்.
முன்னதாக இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டிருந்த அறிக்கையில்,
முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்ற புரளியை கேரள மக்களிடையே கிளப்பி, புதிய அணை கட்டப்பட வேண்டும் என்ற நியாயமற்ற கோரிக்கையை அரசியல் ஆதாயத்திற்காக கேரள அரசு தொடர்ந்து பிடிவாதமாக வலியுறுத்தி வருகிறது.
முல்லைப்பெரியாறு பிரச்சனை குறித்த வழக்கை தீர விசாரித்த உச்சநீதிமன்றம், வல்லுநர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பானது தான் என்றும், எனவே அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடி வரை உயர்த்தி கொள்ளலாம் என்றும், ஆய்வுக்குப் பிறகு அணையின் நீர்மட்டத்தை மேலும் படிப்படியாக 152 அடி வரை உயர்த்தி கொள்ளலாம் என்றும் 2006-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு சற்றும் மதிப்பளிக்காமல், அதனை செயல்படுத்தாமல் இருக்கும் வகையில், 18.3.2006 அன்று கேரள நீர்ப்பாசனம் மற்றும் நீர் பாதுகாப்பு திருத்த சட்டத்தினை கேரள அரசு கொண்டு வந்தது. இதனை எதிர்த்து எனது தலைமையிலான தமிழக அரசால் உடனடியாக 27.3.2006 அன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அணையின் பாதுகாப்பு குறித்து ஆராய அதிகாரக் குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள நிலையில், கேரள அரசு புதிய அணை கட்டப்பட வேண்டும் என்பதை பல்வேறு வழிகளில் வலியுறுத்தி வருகிறது. இது மட்டுமல்லாமல், முல்லைப்பெரியாறு அணை குறித்து கேரள மக்களிடம் ஓர் அச்ச உணர்வை கேரள அரசு மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஏற்படுத்தி வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், முல்லைப்பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டும் முயற்சியை கைவிடவும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தவும் கேரள அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று நான் பாரத பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளேன்.
இருப்பினும், கேரள அரசு இந்த பிரச்சனையை தொடர்ந்து பெரிதுபடுத்தி கொண்டிருப்பதால், டாக்டர் மு.தம்பிதுரை எம்.பி. தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாரத பிரதமர் அவர்களை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணிக்கு நேரில் சந்தித்து முல்லைப்பெரியாறு குறித்த கோரிக்கை மனுவை சமர்ப்பிப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications