முல்லைப் பெரியாறு அணையை நோக்கி 50000 விவசாயிகள் பேரணி – எல்லையில் பதட்டம்

தேனி மாவட்ட போலீசார் அவர்களை எல்லையில் தடுத்து நிறுத்தியதால் பதற்றம் எழுந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அணை இடிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் விவசாயம் பொய்த்துவிடும் என்பது தமிழக விவசாயிகளின் ஆதங்கம்.
கடந்த இருவார காலமாக தமிழ்நாடு- கேரளா எல்லைப் பகுதிகளில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ள முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினை போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக கடைகளை அடைத்து போராட்டம் நடத்திய கூடலூர் பகுதி மக்கள், திடீரென்று முல்லைப் பெரியாறு அணையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.
50 ஆயிரம் விவசாயிகள்
50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் அலைகடலென திரண்டதால் அங்கு பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்த போலீசாரும், துணை ராணுவப் படையினரும் அவர்களை தடுத்து நிறுத்தினர். இருப்பினும் விவசாயிகள் பின்வாங்காமல் அணையை முற்றுகையிடப்போவதாக தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
இதனிடையே பேரணியாக சென்ற விவசாயிகளை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் பழனிச்சாமி, தென்மண்டல ஐஜி ராஜேஸ்தாஸ் ஆகியோர் சமாதானப்படுத்தினர். கேரளா எல்லை மூடப்பட்டு விட்டதால் அணையை நோக்கி பேரணியாக யாரும் செல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர், உடனடியாக அவரவர் வீட்டுக்கு திரும்பி செல்லுமாறும் அவர் வலியுறுத்தினார்.
இருப்பினும் அதனை கேட்காத விவசாயிகள் அணையை நோக்கி முன்னேறி சென்றனர். கேரள அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பிய அவர்கள் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டியின் உருவ பொம்மையையும் எரித்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் எழுந்துள்ளது.
மக்கள் பேரணியாகப் புறப்பட்டு கேரளாவின் குமுளி நோக்கி செல்லும் போராட்டத்தைத் தொடங்கினர்.
அப்போது அதைக் காவல்துறை தடுத்து நிறுத்த முயன்றும் அதையும் மீறி மக்கள் குமுளியை நோக்கிச் சென்ற வண்ணம் இருந்தனர். இந்த பேரணி தவிர்த்து தனித்தனி குழுக்களாகவும் அணையை நோக்கி கிளம்பினர்.
முல்லைப் பெரியாறு அணைக்கு மலையாளிகள் ஊறு விளைவித்தால், வரலாறு காணாத துயரத்தை அவர்கள் சந்திக்க வேண்டி வரும் என்று கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.












Click it and Unblock the Notifications