தானே புயலால் ஆந்திராவில் கடல் சீற்றம்-200 மீனவர்கள் மாயம்; முல்லைத் தீவில் அச்சம்
கொழும்பு & குண்டூர்: வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள தானே புயல் காரணமாக ஆந்திரா கடலில் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. 10 முதல் 15 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் ஆர்ப்பரிக்கின்றன. செவ்வாய்கிழமை மீன்பிடிக்கச் சென்ற 200 மீனவர்கள் மாயமாகியுள்ளனர்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள தானே புயல் மெதுவாக ஆந்திரா கடலோரை பகுதியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் கடல் அலைகள் சீற்றமடைந்துள்ளன.
குண்டூர் மாவட்டம் கிருஷ்ணஜா பகுதியில் இருந்து செவ்வாய்கிழமை 32 படகுகளில் கடலுக்கு சென்ற 180 மீனவர்களும், தளவாய்பேட்டை பகுதியில் இருந்து சென்ற 20 மீனவர்களும் இதுவரை கரைக்கு திரும்பவில்லை. அவர்களது செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. மாயமான 200 மீனவர்கள் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மாயமான மீனவர்களின் உறவினர்கள் கடலுக்குள் சென்றவர்களை எதிர்பார்த்து கவலையுடன் காத்திருக்கின்றனர்.
கடலோர மக்கள் வெளியேற்றம்:
விசாகப்பட்டினம் பகுதிகளில் 100 மீட்டர் தூரம் கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. கடல் இதுவரை இல்லாத அளவுக்கு இரைச்சலுடன் காணப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கான கடலோர கிராமமக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட்டனர்
நெல்லூர், கிழக்கு கோதாவரி, குண்டூர், விசாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் உள்ள ஏராளமான கடலோர கிராமங்களில் கடல் நீர் புகுந்தது. இதில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. கடல் நீரால் சூழப்பட்டுள்ள கிராம மக்களை ஆந்திர அரசு அதிகாரிகள் வெளியேற்றினார்கள். பின்னர் அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
ஸ்ரீகாகுளம், கிழக்கு கோதாவரி மாவட்ட கடல் பகுதிகளில் 15 மீட்டர் உயரத்திற்கு எழும்பிய ராட்சத அலைகளால் உப்பாடா பகுதியில் உள்ள 4 மர படகுகள், ஏராளமான வலைகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. கரையில் நிறுத்தப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்தன.
முல்லைத்தீவில் கவலை:
தானே புயல் தற்போது இலங்கைக்கு மிக அருகில் மையம் கொண்டுள்ளதால் இலங்கை வடக்கில் கடலோரப்பகுதிகளில் கடும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் முல்லைத் தீவில் நேற்று இரவு 9 மணி அளவில் பொங்கிய கடல் அலைகள் ஊருக்குள் புகுந்தது. இதேபோல் செம்மலை, கள்ளப்பாடு, அலம்பில், உடப்புக்குளம் உள்பட ஏராளமான கிராமங்களில் கடல் தண்ணீர் புகுந்தது. கடலோரம் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான படகுகள் கடல் சீற்றத்தில் இழுத்துச் செல்லப்பட்டன.
கடல் நீர் பொங்கி வந்ததால் மீண்டும் சுனாமி வந்து விட்டதாக பீதி ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications