இரவு 11 மணிக்கு கடும் கூச்சல் குழப்பம், வெளிநடப்புகளுக்கிடையே நிறைவேற்றப்பட்ட லோக்பால் மசோதா

Subscribe to Oneindia Tamil

Parliament
டெல்லி: மக்களவையில் நாள் முழுவதும் நடந்த சூடான விவாதத்துக்கு பின், நள்ளிரவில் கடும் கூச்சல் குழப்பத்துக்கும், எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கும் இடையே குரல் ஓட்டெடுப்பு மூலம் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா மீது நேற்று காலை முதல் அனல் பறக்கும் விவாதம் நடந்தது.

இந்த மசோதா பலவீனமாகவும், அரசியல் சட்டத்துக்கு விரோதமாகவும் இருப்பதாக குற்றம் சாட்டிய பாஜக எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மசோதாவை மீண்டும் பாராளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பி வலுவான மசோதாவாக மாற்றியமைக்க வேண்டும் என்றார்.

சி.பி.ஐயை லோக்பால் அதிகாரத்துக்குள் கொண்டு வரவேண்டும் என்றும் லோக்பாலில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு அளிப்பது நாட்டை 2வது பிரிவினைக்கு கொண்டு செல்லும் என்று சுஷ்மா குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

லோக்பால் சட்டத்தின் கீழ் மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பது மாநில உரிமைகளை பறிப்பதாக அமையும் என்றும், சட்டம் இயற்றும் உரிமை மாநில அரசுகளிடமே இருக்க வேண்டும் என்றும் திமுக எம்பி இளங்கோவன் கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலேவும் நிர்ப்பந்தம் காரணமாக மசோதாவை நிறைவேற்றக்கூடாது என்றும் பிரதமரை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வருவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.

மசோதாவுக்கு அதிமுகவும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. அக் கட்சியின் எம்பி தம்பிதுரை பேசுகையில், பிரதமரை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வருவதற்கும், மாநிலங்களில் லோக் அயுக்தா நியமனத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் மீது ஊழல் புகார் வந்ததுமே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்களவை சபாநாயகர் அல்லது மாநிலங்களவை தலைவருக்கு லோக்பால் உத்தரவிடலாம் என்று மசோதாவின் 24வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகாருக்குள்ளானவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை லோக்பாலுக்கு மக்களவை சபாநாயகர் அல்லது மாநிலங்களவை தலைவர் தெரிவிக்க வேண்டும். இந்த சட்டப் பிரிவுக்கு பெரும்பாலான எம்.பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அதில் சில முக்கிய திருத்தங்களை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது. நேற்று இரவில் காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்கள் அவசரமாகக் கூடி விவாதித்தனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், கபில் சிபல் உள்ளிட்ட அமைச்சர்கள் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல் ஆகியோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், மசோதாவில் கொண்டு வரவேண்டிய திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து மசோதாவின் 24வது பிரிவை நீக்கும் தீர்மானம் உள்ளிட்ட 10 திருத்த தீர்மானங்களை அரசே கொண்டு வந்தது. மற்ற கட்சிகள் சார்பில் 46 திருத்தங்களும் கொண்டு வரப்பட்டன. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி விவாதத்துக்கு பதில் அளித்து பேசியபின், திருத்தங்கள் ஒவ்வொன்றாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இடதுசாரி கட்சிகள் சார்பில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டன. லோக்பால் வரம்புக்குள் தனியார் நிறுவனங்களை கொண்டுவரக் கோரும் திருத்தமும் நிராகரிக்கப்பட்டது. மாநிலங்களில் லோக் அயுக்தா தொடர்பாக அதிமுக கொண்டு வந்த தீர்மானமும் நிராகரிக்கப்பட்டது.

மொத்தத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்த தீர்மானங்கள் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டன. அரசு கொண்டு வந்த 10 திருத்தங்கள் மட்டும் ஓட்டெடுப்பில் ஏற்கப்பட்டன. கடைசியாக லோக்பால் மசோதா குரல் ஓட்டெடுப்பில் நிறைவேற்றப்பட்டது.

இரவு பத்து மணியை நெருங்கிய நிலையில், அரசு சார்பில் அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் பேச்சுதான் மசோதா மீதான கிளைமாக்சாக அமைந்தது. மாநிலங்களை ஆலோசிக்காமல் லோக் அயுக்தா அமைக்க முடியாது என்பது உட்பட 10 திருத்தங்கள் அவர் விறுவிறுவென கொண்டு வந்தார்.

அவர் பேசி முடித்ததும், அடுத்த சில நொடிகளில் அரசு மற்றும் எதிர்க் கட்சிகள் கொண்டு வந்த திருத்தத் தீர்மானங்கள் மீது ஓட்டெடுப்பு நடத்த ஆரம்பித்தார் சபாநாயகர் மீரா குமார்.

எதிர்கட்சிகள் கொண்டு வந்த திருத்தத் தீர்மானங்களை ஒவ்வொரு தொகுப்பாக பட்டியலிட்டு, அதன் மீது குரல் வாக்கெடுப்பு நடந்தது. அவை எல்லாமே நிராகரிக்கப்பட்டன.

மாநில அரசுகள் லோக் ஆயுக்தா அமைப்பது கட்டாயம் என முதலில் கூறப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று லோக் ஆயுக்தா அமைப்பது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என திருத்தம் செய்யப்பட்டது.

அதேபோன்று, ராணுவம், கடலோரக் காவல்படை ஆகியவற்றை லோக்பால் வரம்பிலிருந்து நீக்குவதற்கும் திருத்தம் செய்ய அரசு ஒப்புக் கொண்டது.

பிரதமரை விசாரிக்க லோக்பால் உறுப்பினர்களில் நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றிருந்தது. அதை, மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால் போதும் என மாற்றியுனர்.

இந் நிலையில் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய இரு கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து லோக்பால் மசோதா பெரிய அளவில் எதிர்ப்பின்றி இரவு 11 மணியளவில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது.

லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் இடதுசாரி கட்சிகள், அதிமுக மற்றும் பிஜூ ஜனதா தளம் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

மக்களவையில் லோக்பால் மசோதா நிறைவேறினாலும், ராஜ்யசபாவில் ஆளும் கூட்டணிக்கு போதிய பெரும்பான்மை பலம் இல்லாததால், அங்கு மசோதா நிறைவேறுவது கஷ்டமே. அங்கு மசோதா தோற்கவும் கூட வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+