மெரீனா கடற்கரையில் தரை தட்டிய கொரிய கப்பல் மீட்கப்பட்டது
சென்னை: தானே புயலில் சிக்கி அடித்து வரப்பட்டு சென்னை மெரீனா கடற்கரையோரமாக தரை தட்டி நின்ற கொரிய கப்பல் கடும் முயற்சிக்குப் பின்னர் மீட்கப்பட்டது.
இழுவைக் கப்பல் மூலம் அந்தக் கப்பல் மீட்கப்பட்டு ஆழமான பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதை மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பார்த்தார்.
கொல்கத்தா நீதிமன்றத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட தென் கொரிய நாட்டு கப்பல் எம்.வி.ஒ.எஸ்.எம்.அரினா சென்னை துறைமுகம் அருகே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்தது. இந்த கப்பல் 22 மாதங்களாக நிறுத்தப்பட்டு இருந்தது.
கடந்த 30ந்தேதி தானே புயலின் தாக்கத்தால் இந்த கப்பலின் நங்கூரம் அறுந்து தள்ளப்பட்டு மெரினா கடற்கரை அருகே ஆழம் குறைவான இடத்தில் தரை தட்டி நின்றது. அந்த கப்பல், இழுவை கப்பல் முயற்சியால் சற்று ஆழத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அந்த கப்பலை நேற்று மத்திய கப்பல் போக்குவரத்துதுறை அமைச்சர் ஜி.கே.வாசன் படகில் சென்று பார்வையிட்டார். அப்போது ஜி.கே.வாசன் சிறிது தூரம் படகை ஓட்டினார்.
பின்னர் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், புயல் தாக்கிய நேரத்தில் சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக துறைமுகம் மற்றும் கப்பல்களுக்கு எந்தசேதமும் ஏற்படாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை கடற்படை மற்றும் கடலோர காவல்படை உதவியுடன் சென்னை துறைமுகம் மேற்கொண்டது.
நீதிமன்ற நடவடிக்கையால் கைது செய்யப்பட்டுள்ள 3 கப்பல்களில் ஒன்றான ஓ.எஸ்.எம்.அரினா என்ற கப்பல் கடந்த 22 மாதங்களாக சென்னை துறைமுகத்தின் வெளி எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த கப்பல் புயலின் கடுமையான காற்றின் தாக்கத்தால் கரையை நோக்கி தள்ளப்பட்டது. 31ந்தேதி காலையில் சென்னை துறைமுக இழுவை கப்பல் மூலம் இந்த கப்பல் 15 மீட்டர் ஆழத்திற்கு கடலின் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டு நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications