நடுத்தெருவில் அதிமுக ஒன்றியக்குழு துணைத் தலைவர் வெட்டிக் கொலை: திருவண்ணாமலை கோவில் முன்பு பயங்கரம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அதிமுக ஒன்றியக்குழு துணைத் தலைவர் துரை இன்று பட்டப்பகலில் நடுத்தெருவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை புது தெருவைச் சேர்ந்தவர் துரை. துரிஞ்சபுரம் ஒன்றிய குழு துணைத் தலைவர். கடந்த உள்ளாட்சி தேர்தலில் துரிஞ்சபுரம் ஒன்றியம் 16வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்ட அவருக்கு சீட் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் சுயேச்சையாக களமிறங்கி வெற்றி பெற்றார்.
இது தவிர ஒன்றியக்குழு துணைத் தலைவர் பதவிக்கு போட்டி வேட்பாளராக போட்டியிட்டு அதிலும் வென்றார். வெற்றி முகத்துடன் துரை அதிமுகவில் இணைந்தார். இன்று காலை தனது வீட்டில் இருந்து பைக்கில் திருவண்ணாமலை அருணாலேச்சுவரர் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி கும்பிட்டுவிட்டு மாடவீதி வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருமஞ்சன கோபுரம் அருகே பதுங்கியிருந்த 2 வாலிபர்கள் திடீர் என்று அரிவாளுடன் துரையை நோக்கி ஓடி வந்தனர். இதைப் பார்த்து அதிர்ந்த அவர் கைக்கை நிறுத்தினார். உடனே அந்த வாலிபர்கள் துரையின் தலையில் சரமாரியாக வெட்டிவி்டடு தப்பியோடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து இறந்தார்.
பட்டப்பகலில், நடுத்தெருவில் அதுவும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்டதைப் பார்த்த மக்கள் பயத்தில் அலறியடித்து ஓடினர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துரையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட துரை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அதனால் கொலைக்கு தொழிலில் ஏற்பட்ட முன்விரோதமா அல்லது உள்ளாட்சித் தேர்தல் தகராறு ஏதும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications