கோயில்களை பாதுகாக்கும் மாஜி ராணுவத்தினருக்கு ஊதிய உயர்வு: ஜெ.
சென்னை: தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களை பாதுகாக்கும் திருக்கோயில் பாதுகாப்பு படையில் உள்ள முன்னாள் ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்தை ரூ.1,500ல் இருந்து ரூ.5,000மாக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழகத் திருக்கோயில்கள் பண்பாட்டுத் தொன்மை, கலை வளம், வரலாறு, வழிபாட்டு மரபு ஆகியவற்றை உலகெங்கும் பறை சாற்றும் கலைக் களஞ்சியங்களாகும். திருக்கோயில்கள், மக்களின் வழிபாட்டு மையங்களாக விளங்குவதோடு மட்டுமின்றி தமிழர்களின் கலை, பண்பாட்டு வளர்ச்சியின் சின்னங்களாகவும், இந்து சமய மரபுமாட்சியை வெளிக் கொணரும் காலச்சுவடுகளாகவும் விளங்குகின்றன.
இத்திருக்கோயில்கள் ஆன்மீக சிந்தனைகளையும், அற உணர்வுகளையும் சமுதாயத்திற்கு வழங்குவதுடன் ஒழுக்க நெறியையும் கற்றுத் தருகின்றன.
திருக்கோயில்களில் வழிபாடுகள் நடத்துதல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருதல், திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களைப் பாதுகாத்துப் பராமரித்தல் ஆகிய பணிகளை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு எடுத்து வருகின்றது.
தமிழக கோயில்களில் உள்ள விலை உயர்ந்த பொருட்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு முதல்வர் ஜெயலலிதா தனது முந்தைய ஆட்சிக் காலத்தில், அதாவது 1992ம் ஆண்டு திருக்கோயில்களிலுள்ள சிலைகள், நகைகள், உண்டியல் பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை பாதுகாக்கும் பொருட்டு 1,000 இரண்டாம் நிலைக் காவலர்கள் மற்றும் 3,000 முன்னாள் ராணுவ வீரர்களைக் கொண்ட “திருக்கோயில் பாதுகாப்பு படை” என்ற அமைப்பை ஏற்படுத்தினார்கள். இப்பாதுகாப்பு படையில் பணியாற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு 2001ம் ஆண்டு முதல் தொகுப்பூதியமாக ரூ.1,500 வழங்கப்பட்டு வருகிறது.
திருக்கோயில் பாதுகாப்பு படையில் உள்ள முன்னாள் ராணுவத்தினர் ஆற்றும் பணிகளின் தன்மை மற்றும் தற்போது நிலவி வரும் விலைவாசி சூழலை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்தினை 1,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
திருக்கோயில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் முன்னாள் ராணுவத்தினர் இதன் மூலம் மிகுந்த பயன் அடைவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications