புதிய அணையை கூட்டாக கட்டுப்படுத்தலாமே: உம்மன் சாண்டி தாராளம்!
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டப்பட்டால் அதன் கட்டுப்பாட்டு உரிமையை தமிழகத்துடன் பகிர்ந்து கொள்ளத் தயார் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்த கேரள அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் உச்ச நீதிமன்றம் நியமித்த ஐவர் குழுவின் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன் பிறகு உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நீதிபதி ஏ.ஏஸ். ஆனந்த் தலைமையிலான குழுவின் 2 நாள் கூட்டம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. புதிய அணை கட்ட அனுமதி அளித்தால் இரு மாநிலங்களும் அதன் கட்டுப்பாட்டு உரிமையை பகிர்ந்து கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய அணையின் உரிமை குறித்து நாளைக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரமளிக்கப்பட்ட குழு உத்தரவிட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்த முடிவை அந்த குழுவிடம் தெரிவிப்போம்.
முல்லை பெரியாறு அணை பலகீனமாக இருப்பதால் புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா பல ஆண்டுகளாக கூறி வருகிறது. ஆனால் அணை மிகவும் உறுதியாக இருப்பதால் புதிய அணை தேவையில்லை என்று தமிழ்நாடு கூறி வருகிறது. உச்சநீதிமன்றமும் புதிய அணை தேவையில்லை என்ற கருத்தைத் தான் கொண்டிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில உச்ச நீதிமன்றத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட குழு கூட்டத்தில் புதிய அணை என்ற கேரளாவின் கோரிக்கை பரீசிலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இது கேரள மக்களுக்கு கிடைத்த வெற்றி. புதிய அணை கட்டுவதில் கேரளாவுக்கு எந்த மறைமுக திட்டமும் கிடையாது. புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள முதலில் கூறியபோது தங்களுக்கு தண்ணீர் தராமல் இருப்பதற்காகதான் கேரளா கூறிகிறது என தமிழ்நாடு கருத்து தெரிவித்தது. ஆனால் புதிய அணை கட்டினாலும் தற்போது வழங்கப்படும் அதே அளவு தண்ணீரை வழங்க தயார் என கேரள உறுதியளித்தது.
அதற்கு பிறகும் தமிழ்நாடு கேரளாவை நம்பவில்லை. இடுக்கி அணைக்கு தண்ணீரை கொண்டு செல்வது தான் கேரளாவின் திட்டம் என தமிழ்நாடு கூறி வருகிறது. ஆனால் அது உண்மையில்லை. முல்லை பெரியாறு விவகாரத்தை தீர்க்கும் பொறுப்பு உச்சநீதிமன்றத்துக்கு தான் உள்ளது. இதில் கேரளாவும், தமிழ்நாடும மோதிக் கொள்ள வேணடிய அவசியமே இல்லை.
இத்தனை நாட்கள் அணையின் பாதுகாப்பு குறித்து மட்டுமே ஆய்வு செய்து வந்த அது தற்போது தான் முதன்முறையாக புதிய அணை கட்டுவது குறித்து விவாதித்துள்ளது.
முல்லைப் பெரியாறு புதிய அணை கட்டினாலும் தமிழகத்திற்கு தற்போது கிடைக்கும் அதே அளவு நீர் கிடைக்கும் வகையில் சட்டம் கொண்டு வர கேரளா தயாராக உள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் தமிழகம் அச்சப்படத் தேவையேயில்லை என்றார்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 ஆக குறைக்க அதிகாரக் குழு அனுமதி மறுத்துள்ளதே என்று அவரிடம் கேட்டதற்கு, புதிய அணை கட்டப்படும் வரை தற்காலிக ஏற்பாடாக இருக்கட்டுமே என்று நினைத்தே அந்த கோரிக்கையை முன்வைத்தோம் என்றார்.












Click it and Unblock the Notifications