நிர்மா குழும தலைவர் பங்களாவுக்குள் புகுந்த மர்ம கும்பல்: பாதுகாவலர்கள் மீது தாக்குதல்
அகமதாபாத்: பிரபல வாஷிங் பவுடரான நிர்மா நிறுவன அதிபர் கர்சன்பாய் பட்டேல் பங்களா வளாகத்திற்குள் ஆயுதம் ஏந்திய 7 பேர் நுழைந்து காவலாளிகளைத் தாக்கியுள்ளனர்.
பிரபல வாஷிங் பவுடர் நிறுவனமான நிர்மா குழுமத்தின் சேர்மன் கர்சன்பாய் பட்டேலின் பங்களா அகமதாபாத்தின் சார்கெஜ்-காந்திநகர் நெடுஞ்சாலையில் நிர்மா பார்ம் ஹவுஸில் உள்ளது. அந்த வளாகத்தில் 2 பங்களாக்கள் உள்ளன. பழைய பங்களா நுழைவுவாயில் அருகிலும், புதிய பங்களா வாயிலில் இருந்து 1.5 கிமீ தூரத்திலும் உள்ளது. பட்டேல் தனது 2 மகன்களுடன் புது பங்களாவில் தங்கியுள்ளார்.
பங்களா வளாகத்தில் இன்று அதிகாலை 3.15 மணிக்கு 7 பேர் கொண்ட மர்ம கும்பல் 20 அடி உயர சுற்றுச்சுவரைத் தாண்டி உள்ளே நுழைந்தது. அங்கிருந்த காவலாளிகளில் 4 பேரை இந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த கட்டைகளால் தாக்கி, அவர்களை கட்டிப்போட்டது. அங்கு யாரையோ தேடிவிட்டு கிடைக்காததால் அந்த கும்பல் திரும்பிச் சென்றது.
இது குறித்து போலீசார் கூறியதாவது,
பட்டேலின் பங்களா உள்ள வளாகத்தில் 30 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர்களைத் தாண்டி இந்த கும்பல் எப்படி உள்ளே நுழைந்தது, எப்படி 4 பாதுகாவலர்களைத் தாக்கியது என்றே புரியவில்லை. வந்த இளைஞர்கள் அனைவரும் ஜீன்ஸ், டி சர்ட் அணிந்துள்ளனர். அவர்கள் கட்டைகளும், துப்பாக்கியும் வைத்திருந்தனர்.
அவர்கள் பாதுகாவலர்களைத் தாக்கி அசோக் சாவந்த் எங்கே என்று திரும்பத் திரும்பக் கேட்டுள்ளனர். அசோக்கை காணாததால் அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது என்றார்.
அங்கிருந்த யாருக்குமே அசோக் சாவந்த் என்ற பெயரில் யாரையும் தெரியாது என்பது தான் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications