ஆசீர்வாதம் ஆச்சாரியிடம் சம்பந்தமில்லாத கேள்விகள் கேட்ட வழக்கறிஞர்கள்-கடுப்பான நீதிபதி!
டெல்லி: டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்து வரும் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில், முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவின் முன்னாள் கூடுதல் தனிச்செயலாளர் ஆசீர்வாதம் ஆச்சாரியிடம் கடந்த 9 நாட்களாக நடந்து வந்த குறுக்கு விசாரணை நேற்று முடிவுக்கு வந்தது.
இந்த வழக்கில் அவர் சிபிஐ தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், அவரை தங்களுக்கு எதிரான பொய் சாட்சியாக சிபிஐ சேர்த்துள்ளதாக ராசா உள்ளிட்ட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் கூறி வருகின்றனர்.
கடந்த 9 நாட்களாக 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராசா உள்ளிட்ட 9 பேரின் வழக்கறிஞர்கள் ஆச்சாரியிடம் குறுக்கு விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் வழக்கறிஞர்கள் பல எக்குதப்பான கேள்விகளைக் கேட்டு திணறடித்தனர்.
நேற்று நடந்த விசாரணையின்போது, நீங்கள் எப்படி இவ்வளவு சொத்துக்களைச் சேர்த்தீர்கள் என்று ஒரு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். அப்போது இடைமறித்த நீதிபதி ஓ.பி.சைனி, நீங்கள் (வழக்கறிஞர்) எல்லை மீறுகிறீர்கள். இது சொத்துக் பிரச்சனை தொடர்பான வழக்கு அல்ல, இதனால் இந்த வழக்கு சம்பந்தமான கேள்விகளை மட்டும் கேளுங்கள் என்றார்.
இன்னொரு வழக்கறிஞர் அவரிடம், உங்களுக்கு ஞாபக மறதி இருப்பது போல தெரிகிறது. நீங்கள் மருந்து ஏதும் சாப்பிடுகிறீர்களா?, இதனால் உங்களது நினைவு சக்தி பாதிக்கப்பட்டுள்ளதா? என்றார்.
அப்போது இடைமறித்த நீதிபதி, இது சம்பந்தமில்லாத கேள்வி, இதை அனுமதிக்க முடியாது என்றார்.
ஆனாலும் விடாத வழக்கறிஞர், உங்களுக்கு ஞாபக மறதி பிரச்சனை நிரந்தரமானதா அல்லது தாற்காலிகமானதா என்றார். இதனால் கடுப்பான நீதிபதி, இதே போல தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் உங்களுக்கு (வழக்கறிஞருக்கு) கடுமையான அபராதம் விதிப்பேன் என்றார்.
ஸ்வான் டெலிகாம் அதிபர் வினோத் கோயங்காவின் வழக்கறிஞர் மஜித் மேமன், கேட்ட கேள்விகளுக்கு ஆசீர்வாதம் ஆச்சாரி பதிலளிக்கையில், கடந்த ஆகஸ்டு 20ம் தேதி எனது வீட்டுக்கு அடையாளம் தெரியாத ஒருவர் வந்தார். அப்போதே, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், என்னை அச்சுறுத்த முயற்சிக்கிறார்கள் என்று என் மனதில் தோன்றியது.
பிறகு, செப்டம்பர் 2ம் தேதி, நான் முன்பு குடியிருந்த குடியிருப்பின் மேலாளர் எனக்கு போன் செய்தார். நான் ரயில்வே வாரியத்தில் இருந்து விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தது தொடர்பாக விசாரிக்க ஒரு சி.பி.ஐ. அதிகாரி வந்திருப்பதாகக் கூறினார்.
நான் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கவே இல்லை. எனவே, இது குற்றவாளிகளின் வேலைதான் என்று புரிந்து கொண்டேன். நான் நீதிமன்றத்துக்கு வரக்கூடாது என்பதற்காக குற்றவாளிகளின் அச்சுறுத்தல் முயற்சி என்று உணர்ந்து கொண்டேன். இதுபற்றி சி.பி.ஐ. போலீஸ் எஸ்.பி. விவேக் பிரியதர்ஷினியிடம் புகார் கொடுத்தேன் என்றார்.
சி.பி.ஐ. சொல்லிக் கொடுத்ததைத் தான் நீங்கள் சொல்கிறீர்கள். உங்கள் வாக்குமூலம், சி.பி.ஐயால் தயாரிக்கப்பட்டது என்று வழக்கறிஞர் மஜித் மேமன் குற்றம் சாட்டியதை ஆச்சாரி மறுத்தார்.
2ஜி விவகாரத்தை பயேனீர் பத்திரிக்கைக்கு தந்தது ஆச்சாரி தான் என்று கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுசீல் குமார் கூறினார். இது ஆச்சாரி பணியாற்றும் ரயில்வே துறையின் விதிகளை மீறிய செயல் என்று அவர் குற்றம் சாட்டினார். ஆனால், இதை ஆச்சாரி மறுத்தார்.
மேலும் தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நிலுவையில் இருப்பதாலேயே, 2ஜி வழக்கில் ஆச்சாரி பொய் சாட்சியம் அளிக்கிறார் என்றும் சசீல் குமார் குற்றம் சாட்டினார். இதையும் ஆச்சாரி மறுத்தார்.
சிபிஐ சொல்லிக் கொடுத்த சிலவற்றை மட்டுமே நீதிமன்றத்தில் தெரிவிக்கும் ஆச்சாரி, பிற கேள்விகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்து விடுகிறார் என்று யூனிடெக் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.பி.சிங் கூறினார். இந்தக் குற்றச்சாட்டையும் ஆச்சாரி மறுத்தார்.
2ஜி கடித விவகாரம்-நிதித்துறை செயலாளருக்கு ஜே.பி.சி. நோட்டீஸ்:
இந் நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக மத்திய நிதித் துறை சார்பில் பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அந்தத் துறையின் செயலாளருக்கு நாடாளுமன்றக் கூட்டுக் குழு (ஜே.பி.சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜனவரி 11, 12ம் தேதிகளில் ஜே.பி.சி. கூடுகிறது, அப்போது மத்திய நிதித் துறைச் செயலாளர் ஆர்.எஸ். குஜ்ரால் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில், முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் நினைத்திருந்தால் 2ஜி ஊழலைத் தடுத்திருக்க முடியும் என்றும், அவர் அதைச் செய்யவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications