புயல் பாதித்த கடலூர் கிராமங்களில் ‘கேர் இந்தியா’ தொண்டு நிறுவனம் நிவாரணம்
சென்னை: ‘தானே’ புயலால் முற்றிலும் சிதைந்து போன கடலூர் மாவட்ட கிராமங்களில் கேர் இந்தியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் பல்வேறு நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளது.
கேர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த தொண்டர்கள் டிசம்பர் 31 ம் தேதி முதல் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் முகாமிட்டு தேவையான உதவிகளையும், நிவாரணங்களையும் செய்து வருகின்றனர்.
தலித்கள், பழங்குடியினர், குடும்பத்தைக் காக்க பணிக்கு செல்லும் விதவைகள் உள்ளிட்ட 20,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு உதவும் பணியில் கேர் இந்தியா நிறுவனத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
வீடுகளுக்கு கூரைகள்
புயலால் முற்றிலும் சிதைந்து போன வீடுகளுக்கு உடனடியாக தார்பாலின் கூரைகள் அமைக்கவும், இருளில் மூழ்கியுள்ள கிராம மக்களுக்கு மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், சுகாதாரமான உணவுப்பொருட்களும் வழங்கப்பட்டு வருவதாக கேர் இந்தியா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி முகம்மது மூஸா தெரிவித்தார்.
குறைந்த செலவில் குடிசைகள்
புயாலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த செலவில் 100 முதல் 150 ரூபாய் வரை குடிசைகள் அமைத்து தர முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 2004 ம் ஆண்டு டிசம்பரில் கடலூர் மாவட்டத்தில் சுனாமி தாக்கியபோது கேர் இந்தியா நிறுவனம் பல்வேறு நிவாரணப்பணிகளை மேற்கொண்டுள்ளது என்றும் எனவே தமிழ்நாட்டின் தட்ப வெப்ப நிலையை நன்கு அறிந்து செயல்பட முடியும் என்றும் மூஸா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications