பாஜகவில் என்னை சேர்ப்பதை நிறுத்தி வையுங்கள்-கத்காரிக்கு குஸ்வாஹா கோரிக்கை
டெல்லி: பாஜகவுக்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ள முன்னாள் பகுஜன் சமாஜ் கட்சி அமைச்சரான பாபுசிங் குஸ்வாஹா, தன்னை பாஜகவில் சேர்த்துள்ளதை நிறுத்தி வைக்குமாறு கட்சித் தலைவர் நிதின் கத்காரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மாயாவதி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர். இவர் மீது ஊழல் புகார்கள் பெருமளவில் எழுந்ததைத் தொடர்நது அவரை கட்சியை விட்டு தூக்கி விட்டார் மாயாவதி. தூக்கிய வேகத்தில் அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டது பாஜக. கட்சிக்குள் அவரை சேர்த்தது.
இது மாயாவதி, மேனகா காந்தி உள்ளிட்ட பல முக்கிய பாஜக தலைவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி அளித்தது. காங்கிரஸ் மீது பெருமளவில் ஊழல் புகார்களைக் கூறி தேசிய அளவில் பாஜக பெரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், இப்படி ஊழல்வாதியான குஸ்வாஹாவை கட்சியில் சேர்த்தால் மக்கள் என்ன நினைப்பார்கள், காங்கிரஸார் எப்படி கேவலமாக பேசுவார்கள் என இவர்கள் கொந்தளித்தனர்.
இந்த நிலையில் உ.பி மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளரான உமா பாரதி, தான் பிரசாரம் செய்யப் போவதில்லை என்று அதிரடியாக அறிவித்தார். இதனால் பாஜக தலைமை அதிருப்தி அடைந்தது, குழப்பமடைந்தது.
இந்த நிலையில் தன்னால் பிரச்சினை வேண்டாம் என்றும், தன் மீதான உண்மையை நிரூபிக்கும் வரை பாஜக உறுப்பினராக தன்னை சேர்க்கு்ம் முடிவை நிறுத்தி வைக்குமாறும் கத்காரிக்கு கடிதம் அனுப்பியுள்ளார் குஸ்வாஹா.
இதுகுறித்து அவர் கூறுகையில், என்னால் பாஜகவுக்கு எதிர்மறையான பெயர் ஏற்படுவதை நான் விரும்பவில்லை. நான் அப்பாவி என்பதை நிரூபிக்கும் வரை எனது உறுப்பினர் பதவியை நிறுத்தி வைக்குமாறு கட்சித் தலைவரை கேட்டுக் கொண்டுள்ளேன். நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன் என்றார்.












Click it and Unblock the Notifications