தானே புயல் நிவாரணப் பணிகளுக்கு முதல் கட்டமாக ரூ. 500 கோடி வழங்க தமிழக அரசு கோரிக்கை

தானே புயல் தாக்கி வெகு நாட்களான நிலையில், மத்திய அரசு தொடர்ந்து மெளனம் சாதித்து வந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் கண்டனத்தைத் தொடர்ந்து நேற்று மத்திய குழு சென்னை வந்தது.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடுவதற்காக உள்துறை இணைச் செயலாளர் லோகேஷ் ஜா தலைமையில் மத்திய அரசு குழு ஒன்றை அமைத்தது.
இந்த குழுவில், மத்திய வேளாண்மைத் துறை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் கே.மனோகரன், மத்திய திட்டக் குழு முதுநிலை ஆராய்ச்சி அலுவலர் முரளீதரன், மத்திய நீர்வள ஆதாரத் துறை கண்காணிப்புப் பொறியாளர் ஆர்.சுந்தரமூர்த்தி, மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் திக்விஜய் மிஸ்ரா, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதுநிலை மண்டல இயக்குனர் டாக்டர் டி.பழனிவேலு, மத்திய மின்துறை இயக்குனர் விவேக் கோயல், மத்திய குடிநீர் மற்றும் பொது சுகாதாரத் துறை துணை ஆலோசகர் ஆர்.ஜெ.தத்தா சவுத்ரி, மத்திய கால்நடை மற்றும் மீன்வளத்துறை நிர்வாக இயக்குனர் டாக்டர் பி.பால்பாண்டியன் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக இந்த குழு நேற்று சென்னை வந்தது. மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகம் வந்த இந்த குழுவினர் தமிழக அரசு தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கியை சந்தித்து 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.
அதைத்தொடர்ந்து புயல் பாதிப்பு மற்றும் சேத விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறையின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில், நிதித்துறை, வருவாய்த் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பொதுப்பணித் துறை, வேளாண்மைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, உணவுத் துறை, எரிசக்தி துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை, உணவு வழங்கல் துறை, தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராஜீவ் ரஞ்சன், வருவாய் நிர்வாக ஆணையர் ஞானதேசிகன், சென்னை மாநகராட்சி கமிஷனர் பி.டபிள்யூ.சி.டேவிதார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், புயல் சேத விவரங்கள் கொண்ட விரிவான அறிக்கையை மத்திய குழு தலைவர் லோகேஷ் ஜாவிடம் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி வழங்கினார்.
பின்னர் ஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக வந்துள்ளோம். தமிழக அரசின் தலைமைச் செயலாளரை சந்தித்து புயல் சேத விவரங்களை கேட்டு அறிந்தோம். துறை வாரியாக ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி அந்தந்த துறையைச் சேர்ந்த செயலாளர்கள் விரிவாக எடுத்துரைத்தார்கள். புயல் பாதிப்பு குறித்த விரிவான அறிக்கை ஒன்றையும் தமிழக அரசு சார்பில் அளித்து உள்ளனர். புயல் பாதிப்பு குறித்த வீடியோ படக் காட்சிகளையும் பார்த்தோம்.
புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை ஞாயிற்றுக்கிழமை முதல் பார்வையிட இருக்கிறோம். 3 நாட்கள் வரை இந்தப் பணிகளை மேற்கொள்வோம். அரசு அதிகாரிகளும், மாவட்ட அதிகாரிகளும் எங்களுடன் வந்து சேத விவரங்களை எடுத்து கூறுவார்கள்.
புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட பிறகு, சென்னைக்கு மீண்டும் செவ்வாய்க்கிழமை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவோம். அதன்பிறகு டெல்லி சென்று புயல் சேத விவரங்கள் குறித்த அறிக்கையினை மத்திய அரசிடம் அளிப்போம் என்றார்.
இன்று புதுச்சேரியில் ஆய்வு
மத்திய குழுவினர் இன்று புதுச்சேரியில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்கின்றனர். நாளை கடலூர்செல்கின்றனர். அன்று இரவு கடலூரிலேயே தங்குகின்றனர்.
பின்னர் 10ம்தேதி இரு குழுவாகப் பிரிந்து ஒரு குழு தஞ்சை, திருவாரூர், நாகை செல்கிறது. இன்னொரு குழு விழுப்புரம், காஞ்சிபுரம் செல்கிறது.
தேசியப் பேரிடராக அறிவிக்க அரசு கோரிக்கை
இதற்கிடையே இதுவரை இல்லாத அளவு மிகப் பெரிய சேதம் ஏற்பட்டிருப்பதால் ரூ. 5000 கோடி அளவுக்கு முதல் கட்டமாக தமிழகத்திற்கு நிதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்து மத்திய குழுவிடம் மனு அளித்துள்ளது.
மேலும், புயல் சேதத்தை தேசிய பேரிடராக அறிவித்து உரிய நடவடிக்கை, நிவாரண உதவிகளை அளிக்க வேண்டும் என்றும் தமிழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆனால் தமிழகம் கோரியுள்ள நிதியினை மத்திய அரசு தருமா என்பது சந்தேகம் என்கிறார்கள். காரணம், மத்திய குழு தரும் அறிக்கையின் அடிப்படையில்தான் மத்திய அரசு நிதியதுவி செய்யுமாம். மத்திய குழு தரப் போகும் அறிக்கையை ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் ஒரு குழு உள்ளது. இந்தக் குழு ஆய்வு செய்து பரிந்துரைத்த பின்னர்தான் மத்திய அரசு நிதியுதவி செய்யும் என்கிறார்கள்.
எனவே மத்திய அரசிடமிருந்து எப்போது நிதியுதவி வரும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஏற்கனவே புயல் பாதிப்பு குறித்து மத்திய அரசின் பெருத்த மெளனம் மற்றும் செயல்படாத தன்மை குறித்து பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. திமுக தலைவர் கருணாநிதியும் மறைமுகமாக மத்திய அரசை கண்டித்துள்ளார். இந்த நிலையில் நிதியுதவியாவது சீக்கிரம் வருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications