இன்னொருவர் நிலத்தை 'சுட்டு' வீடு கட்டியதாக மன்சூர் அலிகான் மீது புகார்

சினிமாவில் வில்லனாக நடித்து வரும் மன்சூர் அலிகான் நிஜத்திலும் வில்லனாகி விட்டார். ரியல் எஸ்டேட் அதிபரான துரைவேலு என்பவரின் ரூ. 1 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் மீது மேலும் ஒரு நில அபகரிப்பு புகார் வந்துள்ளது.
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் ஜே.கே.திரிபாதியை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார். அதில், எனக்கு சொந்தமான நிலம் வடபழனி 100அடி ரோட்டிற்கு அருகில் உள்ளது. இதனை நடிகர் மன்சூர் அலிகான் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளார். இதன் மதிப்பு ரூ. 50 லட்சம்.
எனது நிலத்தை விட்டு விலகிச் செல்லுங்கள் என்று மன்சூர் அலிகானிடம் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்தார். எனது நிலத்தை மன்சூர் அலிகானிடமிருந்து மீட்டுத் தர வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதுகுறித்து விசாரிக்குமாறு மத்திய குற்றப் பிரிவுக்கு கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மன்சூர் அலிகானை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. விசாரணைக்குப் பின்னர் இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்படக் கூடும்.
கடந்த காலங்களில் மன்சூர் அலிகான் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல வழக்குகளில் சிக்கியவர். தற்போது அவர் மீது அடுத்தடுத்து நில அபகரிப்பு வழக்குகள் கிளம்புவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications