சென்னை எழிலகத்தில் பயங்கர தீ: கட்டடம் இடிந்து தீயணைப்பு வீரர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் அரசு அலுவலகங்கள் இயங்கும் எழிலகம் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க முயன்ற தீயணைப்புப் படை வீரர் ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.

பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

இங்கு பல அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள வணிக வரி அலுவலகத்தில் தான் முதலில் தீ பிடித்துள்ளது. இதையடுத்து அருகில் இருந்த சமூக நலத்துறை அலுவலகத்திற்கும் தீ பரவியது.

கட்டத்தின் வாட்ச்மேன் பாகு என்பவர் உடனடியாக தீயணைப்புப் படையினருக்கு தகவல் தந்தார்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

ஒரு மணி நேரத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்டது. இதையடுத்து தீயணைப்புப் படையின் சென்னை மத்திய மண்டல அதிகாரி பிரியா ரவிச்சந்திரன், இரவு 1.30 மணிக்கு கட்டடத்துக்குள் நுழைந்தார். அப்போது, திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் அவருடன் உள்ளே நுழைந்த தீயைணப்புப் படை வீரர் அன்பழகன் (55), அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

பிரியா, தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன், மற்றும் பிரபாகரன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலை வரை தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்து வந்தது. 150க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

காலை 9 மணிக்குத் தான் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது.

பலியான தீயணைப்பு வீரர் அன்பழகன் தேனாம்பேட்டை தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்தவர். அவரது உடல் மீட்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்துக்கு சதிச் செயல் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால், மின்சார கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் 14, 15, 16 ஆகிய தேதிகளில் தொடர்ந்து பொங்கல் விடுமுறை வந்ததால் ஊழியர்கள் வெள்ளிக்கிழமை மாலையே அலுவலகத்தை பூட்டிச் சென்று விட்டனர். அப்போது ஏ.சி. மெஷினை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அணைக்காமல் சென்றார்களா என்றும் விசாரணை நடக்கிறது.

அரசு துறை அலுவலகம் வேறு இடத்துக்கு மாற்றம்:

கட்டிடம் நாசமாகிவிட்டதால், இரு அரசுதுறை அலுவலகங்களும் தற்காலிகமாக வேறு கட்டிடத்துக்கு மாற்றப்படுகின்றன.

தீ விபத்து பற்றி கேள்விப்பட்டதும் சத்துணவு மற்றும் சமூக நலத்துறை செயலாளர் கோபால் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், மின்சார கசிவு காரணமாக கட்டிடத்தில் தீப்பிடித்து இருக்கலாம் என்று தெரிகிறது. இங்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள சத்துணவு அலுவலகங்கள், சமூக நலத்துறை அலுவலகங்களின் ஆவணங்கள் இருந்தன.

கம்ப்யூட்டர்களிலும் சேகரித்து வைக்கப்பட்டு இருந்தது. ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள் எரிந்து நாசமானாலும் அவற்றுக்கான நகல் காப்பி பாதுகாப்பாக உள்ளது. அதற்கு பாதிப்பு ஏற்படவில்லை. ஒன்றியங்களுக்கு மேல் உள்ள ஆவணங்கள்தான் இங்கு இருக்கும் மற்ற ஆவணங்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலேயே வைக்கப்பட்டிருக்கும்.

கட்டிடம் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமாக இருப்பதால் அரசு துறை அலுவலகங்களை வேறு இடத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார்.

தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் மேயர் சைதை துரைசாமியும் சென்று பார்வையிட்டார்.

முதல்வர் ரூ. 2 லட்சம் நிதியுதவி:

இந் நிலையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு பலியான தீயணைப்பு வீரரின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் உதவித் தொகை வழங்கப்படுமென்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணியிலிருக்கும்போது காலமான முன்னணி தீயணைப்பாளர் அன்பழகன் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்த பிரியா ரவிச்சந்திரன் மற்றும் முருகன் ஆகியோருக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும், சாதாரண காயமடைந்த பிரபாகரன் என்பவருக்கு 10 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+