நாகப்பட்டினம் துறைமுகத்தை மேம்படுத்த ரூ.380 கோடி: ஜெயலலிதா
சென்னை: இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஒரு நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு இன்றியமையாதது துறைமுகங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. துறைமுக மேம்பாடும், தொழில் வளர்ச்சியும் ஒன்றொடொன்று இணைந்துள்ளதால், பொது, தனியார் கூட்டமைப்பின் மூலம் சிறு துறைமுகங்களை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
அந்த வகையில், நாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகத்தினை பொது, தனியார் கூட்டாண்மை அடிப்படையில் 380 கோடி ரூபாய் செலவில் அனைத்து பருவ கால நிலைக்கேற்ப ஆழ்கடல் கப்பலனை மற்றும் பசுமை சூழலுடன் கூடிய துறைமுகமாக மேம்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இத்துறைமுகம் மேம்படுத்தப்பட்டு அதனுடைய செயல்பாடுகள் துவங்கும் முதல் ஆண்டில் சுமார் 10 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டு, அதன் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 20 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். இது படிப்படியாக வளர்ச்சி பெற்று 25ம் ஆண்டில் சுமார் 60 லட்சம் டன் சரக்குகள் கையாளும் நிலைக்கு உயரும்.
அதன் மூலம் சுமார் 120 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வழிவகை ஏற்படும். தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள இந்த துறைமுகத்தின் மேம்பாட்டினால், இதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான அத்தியாவசிய துறைமுக இணைப்பு வசதி இதன் மூலம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
மேலும், இத்திட்டத்தின் மூலம் தொழில் வளர்ச்சியில் பின் தங்கியுள்ள இப்பகுதிகளில் அதிக வேலைவாய்ப்பு வசதியும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
குறைந்த வட்டியில் கடன்-கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.82 கோடி மானியம்:
அரசு வெளியிட்டுள்ள இன்னொரு செய்திக்குறிப்பில், பொது மக்களிடமிருந்து பெறப்படும் வைப்புத்தொகை மற்றும் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியிடம் பெறப்படும் மறு நிதி ஆகியவற்றின் மூலம் பெறும் நிதி ஆதாரத்தினைக் கொண்டு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் போன்ற பல்வேறு கூட்டுறவு சங்கங்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் நிதி உதவி அளித்து வருகின்றன.
கிராமப் புறங்களில் வேளாண் சார்ந்த மற்றும் வேளாண் சாரா கடன்கள் வழங்குவதே இச்சங்கங்களின் நோக்கமாகும். விவசாயத்துறையில் இரண்டாம் பசுமைப்புரட்சி ஏற்படுத்த பாடுபடும் முதல்வர் ஜெயலலிதா வேளாண் தொழிலில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் நிதிநிலைமை சீராக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு,
175 தகுதியுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு மானியமாக 30 கோடியே 51 லட்சத்து 51 ஆயிரத்து 222 ரூபாயும், 18 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு மானியமாக 46 கோடியே 73 லட்சத்து 25 ஆயிரத்து 629 ரூபாயும், மற்றும் 53 தகுதி பெறாத தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு மானியமாக 5 கோடியே 29 லட்சத்து 80 ஆயிரத்து 811 ரூபாயும் என மானியமாக 82 கோடியே 54 லட்சத்து 57 ஆயிரத்து 662 ரூபாயை விடுவிக்கமுதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications