நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நாளை துவக்கம்
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நாளை(21.1.2012) முதல் தொடங்குகிறது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வறண்ட பிரதேசமாக இருந்தாலும் அகத்திய மலையில் இருந்து உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு 2 மாவட்டங்களின் வழியாக பாய்ந்து ஓடுகின்றது. இதனால் 2 மாவட்டங்களும் தென் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்கின்றது.
இந்த நிலையில் தாமிரபரணி ஆறு மற்றும் அதனை சார்ந்துள்ள குளங்கள் எண்ணற்ற பறவைகளை தன்னகத்தே கவர்ந்து இழுத்து பறவைகளின் முக்கியமான தளமாக உள்ளது. கூத்தன்குளம், வாகைகுளம் உள்ளிட்ட குளங்கள் பறவைகள் தங்குவதற்கு தகுந்த வாழ்விடமாக உள்ளன.
ஆனால் பெரும்பாலான குளங்கள் ஆக்கிரமிப்பு, குவாரிகள், மாசு, மரங்கள் வெட்டப்படுதல் உள்ளிட்ட காரணங்களால் அபாயகரமான நிலையில் உள்ளன. இதனையடுத்து மணிமுத்தாறு அகத்திய மலை சமுதாயம் சார்ந்த இயற்கை வள பாதுகாப்பு மையம் மற்றும் தூத்துக்குடி முத்துநகர் இயற்கை சங்கமும் இணைந்து வரும் 21ம் தேதி (நாளை) மற்றும் 22ம் தேதி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள முக்கிய குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 69 வகையை சேர்ந்த 32,000 மேற்பட்ட பறவைகள் கணக்கெடுக்கப்பட்டன. 2 நாட்கள் நடத்தப்பட்ட இக்கணக்கெடுப்பில் 45 தன்னவர்கள் கலந்து கொண்டு 42 குளங்களில் கணக்கெடுப்பு நடத்தினர். இந்த ஆண்டும் கணக்கெடுப்பு தன்னர்வர்கள் வரவேற்கப்படுகின்றனர்.
18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் இக்கணக்கெடுப்பில் கலந்து கொள்ளலாம். அவர்களுக்கு பறவைகள் இனம் கண்டறிதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications