7 மாதங்களில் 3வது முறையாக துறை மாறிய கே.ஏ.செங்கோட்டையன்

ஜெயலலிதாவின் விசுவாசிகள் படையின் தளபதியாக ஒரு காலத்தில் திகழ்ந்தவர் செங்கோட்டையன். திட்டமிடுதலில் சிறந்தவரான இவர்தான் ஜெயலலிதாவின் பிரசாரத் திட்டங்களை வகுத்துக் கொடுத்தார் அக்காலத்தில். இப்போதும் கூட ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
அடக்கமாக இருப்பார் அதேசமயம் எதை செய்தாலும் ஆணித்தரமாக செய்து ஜெயலலிதாவிடம் நற்பெயர் பெறுபவர். ஈரோடு மாவட்டத்திலும், கொங்கு மண்டலத்திலும் அதிமுக தொடர்ந்து பலமுடன் இருக்க செங்கோட்டையனின் தீவிரப் பணிகளும் ஒரு காரணம்.
விவசாயியான செங்கோட்டையன் இன்றளவும் விவசாயத்தை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு அரசியல் தலைவர். எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே அதிமுகவில் தீவிரமாக செயல்பட்டு வரும் செங்கோட்டையன் தற்போது 2வது முறையாக அமைச்சராக இருந்து வருகிறார்.
கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து 6வது முறையாக வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்த செங்கோட்டையன், 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக அரசின் போக்குவரத்து மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
கடந்த மே மாதம் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவை பதவியேற்றபோது செங்கோட்டையனுக்கு வெயிட்டான துறை தரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் முக்கியமான வேளாண்மைத்துறையைப் பெற்றார் செங்கோட்டையன்.
ஆனால் சசிகலாவின் அரசியலில் சிக்கி செங்கோட்டையனின் தலையும் தப்பவில்லை. ஜெயலலிதாவுக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்த போதிலும், அதையும் தாண்டி சசிகலா என்ற புயல் உள்ளே புகுந்து செங்கோட்டையனிடமிருந்த வேளாண்துறையைப் பறிக்க வைத்து விட்டது. இதனால் தகவல் தொழில்நுட்பத் துறை என்ற சாதாரண துறைக்கு அவர் மாற்றப்பட்டார்.
இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த செங்கோட்டையனுக்கு தற்போது வருவாய்த்துறையைக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.
வருவாய் நிர்வாகம், துணை கலெக்டர்கள், எடை மற்றும் அளவு, கடன் சட்டங்கள் மற்றும் நிவாரணம், சிட்பண்ட், கம்பெனிகள் பதிவு ஆகிய இலாகாக்கள் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது நல்ல துறைதான் என்ற போதிலும், மூத்த அமைச்சரான செங்கோட்டையனை இப்படி அடிக்கடி மாற்றுவது சரியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications