குண்டர்கள், திருடர்களுடன் கூட்டணி கிடையாது: சமாஜ்வாடி பற்றி ராகுல் பேச்சு!
லக்னோ: குண்டர்கள், திருடர்களுடன் எல்லாம் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உத்தர பிரதேசத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவி்த்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் கடந்த 22 ஆண்டுகளாக காங்கிரஸால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்போடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
கபீர் நகர் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது,
நீங்கள் எனது பாட்டி இந்திரா காந்தியை நம்பினீர்கள். அவருக்குப் பிறகு எனது தந்தை ராஜீவ் காந்தியை நம்பினீர்கள். அதே போன்று தற்போது என் மீது நம்பிக்கை வையுங்கள் என்று கேட்கத் தான் இங்கு வந்திருக்கின்றேன்.
தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி யாருடனும் கூட்டணி வைக்காது. நிச்சயம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தான் முதல்வராவார். நாங்கள் மக்களுடன் கூட்டணி வைத்துள்ளதால் இங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். எனது உடம்பில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நான் உங்களுக்காக பாடுபடுவேன். நாங்கள் குண்டர்கள், திருடர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம்.
காங்கிரஸ் ஆட்சி்க்கு வந்தால் உங்கள் குறைகள் அவ்வப்போது தீர்த்து வைக்கப்படும். எதிர்கட்சிகள் தவறான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுகின்றன. உங்கள் வாக்கைப் பெற அவர்கள் எந்த வாக்குறுதியையும் அளிப்பார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை. பிற கட்சிகளைப் போன்று ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு, ஜாதியினருக்கு நன்மை செய்வோம் என்று நாங்கள் கூறவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் நல்லது செய்வோம் என்றார்.
காங்கிரஸ் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்ற பேச்சு அடிபட்டது. அதற்குத் தான் குண்டர்கள், திருடர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று ராகுல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications