இலவச ஜெனரேட்டர், டீசலும் கொடுத்தால் நன்றாக இருக்கும்: இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: கிரைண்டர், ஃபேன், மிக்சி கொடுக்கும் அரசு கூடவே ஒரு ஜெனரேட்டரும், டீசலும் கொடுத்தால் நன்றாக இருக்கும் என மக்கள் கூறுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.

பாளையங்கோட்டையில் நேற்று காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

கூடங்குளம் அணுமின் நிலையம் அவசியம் தேவை என்பது அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் கட்சியைத் தவிர பிற திராவிட கட்சிகள் இப்பிரச்சனையை அரசியலாக்கி அரசியல் ஆதாயம் தேட பார்க்கின்றன. தற்போது நகர்ப்புறங்களில் 8 மணி நேரமும், கிராமப்புறங்களில் 12 மணி நேரமும் மின்வெட்டு உள்ளது. இதனை தீர்க்க ஆளுங்கட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த ஆட்சியில் 2 மணி நேரம் மின்வெட்டு இருந்த போது அதற்கு காரணமானவர்களை குடும்பத்துடன் மக்கள் வீட்டிற்கு அனுப்பினர். ஆனால் தற்போது 8 மணி நேர மின்வெட்டிற்கு காரணமானவர்களை யாருடன் வீட்டிற்கு அனுப்ப போகின்றனர் என்பது தெரியவில்லை. சனிப் பெயர்ச்சி போல் தற்போது பல பெயர்ச்சிகள் நடந்து வருகிறது.

வீட்டில் பல வேலைகளை செய்ய பெண்கள் மறந்துவிட்டனர். இலவசம் என்ற பெயரை தவிர்த்து விலையில்லா பொருட்கள் என்று கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். கிரைண்டர், ஃபேன், மிக்சி கொடுக்கும் அரசு கூடவே ஒரு ஜெனரேட்டரும், டீசலும் கொடுத்தால் நன்றாக இருக்கும் என மக்கள் கூறுகின்றனர். காஷ்மீரில் அதிக பனி காரணமாக ஏற்பட்ட மின்வெட்டினால் தனது வீட்டிற்கு மின்சாரம் தேவையில்லை என்று அங்குள்ள முதல்வர் உமர் அப்துல்லா கூறுகிறார். ஆனால் இங்கு 8 மணி நேரம் மின்வெட்டு இருந்து இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காதவர் முதல்வரா என்பதை மக்கள் எண்ணி பார்க்க வேண்டும்.

கூடங்குளம் விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு தலைவர் கூறுகிறார். பல அரசியல் கட்சி தலைவர்களும் இதனை கூறுகின்றனர். மக்களுக்கு காங்கிரஸ் கட்சி மட்டுமே நல்லது செய்து வருகிறது. ஒரு புறம் மின்வெட்டு என்கின்றனர், மறுபுறம் அணு உலைக்கு திராவிட கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது கையில் வெண்ணெயை வைத்து கொண்டு நெய்க்கு அலைவது போல் உள்ளது. முறைப் பெண்ணை வைத்து கொண்டு ஊர் ஊராக பெண் தேடுவது போல் உள்ளது.

தமிழகத்திற்கு ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி அளிக்கப்படும் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார். திராவிட இயக்கங்கள் தமிழகத்தை குட்டி சுவராக்கி வருகின்றன என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+