For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்

By Chakra
Google Oneindia Tamil News

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் தி.மு.கவும் தே.மு.தி.கவும் கைகோர்த்து இணைந்து விட்டதாக முன்னாள் திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சவால் விட்டு தேமுதிக தலைவர் விஜய்காந்த் பேசியது, இதையடுத்து அவர் 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஆகியவற்றை வைத்து தேமுதிகவுடன் நெருக்க திமுக தீவிரம் காட்டி வருகிறது.

சட்டசபையிலிருந்து விஜய்காந்துக்காக திமுக வெளிநடப்பு செய்ததையும், விஜய்காந்த்துக்கு ஆதரவாக திமுக தலைவர் கருணாநிதி பேசி வருவதையும் யாரும் கவனிக்கத் தவறவில்லை.

இந் நிலையில் முன்னாள் அமைச்சரும் கடலூர் மாவட்ட திமுக செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஒரு படி மேலேயே போய்விட்டார். இந்த மாவட்டத்தில் திமுக-தேமுதிக இணைந்திருப்பதாக உள்ளதாகக் கூறியுள்ளார். அதுவும், தே.மு.தி.க. அவைத் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனை மேடையிலேயே வைத்துக் கொண்டு.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகேவுள்ள பெரியகாட்டு சாகை தி.மு.க. செயலாளர் விவேகானந்தன் இல்லத் திருமணத்தில் பன்னீர்செல்வமும், பண்ருட்டி ராமச்சந்திரனும் பங்கேற்றனர்.

மணமக்களை வாழ்த்தி பன்னீர்செல்வம் பேசுகையில், இந்தத் திருமணம் தே.மு.தி.கவும், தி.மு.க.வும் சம்பந்தம் கொள்கிற திருமணம். மணமகள் தே.மு.தி.க. சட்டமன்ற துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரனின் தாய் மாமன் பேத்தி.

மணமகன் தி.மு.க. கிளை கழகச் செயலாளர் விவேகானந்தனின் சகோதரர். ஆகவே, கடலூர் மாவட்டத்தில் இன்றைய தினம் தே.மு.தி.க.வும், தி.மு.கவும் இணைகின்றன.

எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சட்டசபை மரபை மீறி சஸ்பெண்ட் செய்து தூக்கி வீசப்பட்டுள்ளார். இந்த அவையிலே கூடியிருக்கின்ற தாய்மார்களும், பெரியோர்களும், குறிஞ்சிப்பாடி தொகுதியை சேர்ந்தவர்கள். உங்கள் முகங்களை பார்க்கும்போது சட்டமன்ற தேர்தலில் நீங்கள் செய்த தவறை உணர்ந்து வருத்தப்படுவது தெரிகிறது.

தர்மம் வெல்லும், என்னதான் தானே புயல் தாக்கியிருந்தாலும், நம்மை நாமே காத்துகொள்ளும் காலம் வெகு விரைவில் மலரும் என்றார்.

ஆனால், அடுத்துப் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன் அரசியலை தவிர்த்துவிட்டு, மணமக்களை வாழ்த்தி மட்டும் பேசிவிட்டு அகன்றார்.

திமுகவுக்கும் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும் எப்போதுமே ஏழாம் பொறுத்தம் என்பது குறிப்பிடத்தக்கது. 1970களில் திமுக-அதிமுக இணைய இருந்ததைக் கூட கெடுத்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தான் என்று திமுக தலைவர் கருணாநிதியே முன்பு குற்றம் சாட்டியது நினைவுகூறத்தக்கது.

எதிர்காலத்தில் திமுக-தேமுதிக கைகோர்க்க வேண்டுமானால் கூட, அது பண்ருட்டி ராமச்சந்திரனைத் தாண்டித்தான் நடந்தாக வேண்டும்.

English summary
DMK-DMDK have joined hands in Cudallore district, said former minister MRK Paneerselvam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X