காதல்.. பணம் பறிப்பு: திவாகரன் மீது மேலும் ஒரு வழக்கு!
மன்னார்குடி: வீடு இடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளன சசிகலாவின் சகோதரர் திவாகரன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாலிபர் ஒருவரை கடத்தி ரூ.1 லட்சம் பணம் பறித்ததாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் முன்னாள் உயிர்த்தோழி சசிகலா போயஸ் தோட்டத்தில் வெளியேறிய பின்னர், அவருக்கு நெருக்கமானவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவரது உறவினர் ராவணன், சசிகலாவின் சகோதரர் திவாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திவாகரன் மீது வீடு இடிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொலை மிரட்டல், பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த எடையூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் எடையூர் போலீசில் சசிகலாவின் தம்பி திவாகரன் மீது புகார் கொடுத்தார்.
அதில், தனது உறவினர் மகள், தனது வீட்டில் தங்கியிருந்து, மன்னார்குடி சுந்தரக்கோட்டையில் உள்ள திவாகரனுக்கு சொந்தமான கல்லூரியில் படித்து வந்ததாகவும், கடந்த ஆண்டு அவர் காதலித்த ஒரு பையனோடு ஊரைவிட்டு சென்றுவிட்டதால் கல்லூரிக்கு கெட்டபெயர் ஏற்பட்டு விட்டதாக கூறி, தனது வீட்டில் தங்கியிருந்து உறவினர் மகள் படித்த காரணத்திற்காக, சசிகலாவின் தம்பி திவாகரன், ரகுநாதன் மற்றும் சிலர் கடந்த 9.9.2011 அன்று தன்னை கடத்திச்சென்றதாகவும், கத்தியை காட்டி மிரட்டி ரூ.1 லட்சம் பணத்தை பறித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் பேரில் எடையூர் போலீசார் திவாகரன், ரகுநாதன் மற்றும் பலர் மீது, 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வீடு இடிப்பு வழக்கில் திவாகரன் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந் நிலையில் இந்த புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீடு இடிப்பு வழக்கில் வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் இந்த மிரட்டல் வழக்கில் அவர் மீண்டும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications