ஓட்டுக்கு பணம் கொடுத்தால் ஒரு ஆண்டு ஜெயில் : மத்திய அரசு ஏற்பு
டெல்லி : தேர்தலில் போது ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு இனி ஒரு ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என தெரிகிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு கிரிமினல் குற்றப்பிரிவின் கீழ் கடுமையான தண்டனை வழங்கும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலோ, உள்ளாட்சி தேர்தலோ, எந்த தேர்தல் என்றாலும் பணம் கொடுத்து ஓட்டுக்களை பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் தேர்தலில் தைரியமாக போட்டியிடுகின்றனர் வேட்பாளர்கள். அதுவும் இடைத்தேர்தல் என்றால் 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் தாராளமாய் புழங்குவது வாடிக்கை. இந்த நிலையில் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணைய கண்காணிப்பு பிரிவுத் தலைவர் பி.கே.தாஸ், செய்தியாளர்களிடம் பேசியதாவது,
பணம் மற்றும் அதிகார பலம் தேர்தல் ஆணையத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தலில், அதிக அளவாக உத்திரப்பிரதேசத்தில், சுமார் 54 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் பிடிபட்டுள்ளது. பஞ்சாப்பில் 13 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது, கிரிமினல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஒரு ஆண்டு சிறை
இதனிடையே தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டுள்ள மத்திய சட்டத்துறை, இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அதிகாரம் வழங்கவும் சட்டத்திருத்தம் செய்ய பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications