சென்னையில் பள்ளிக்கு சென்ற 7ம் வகுப்பு மாணவன் கடத்தல்: மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
சென்னை: சென்னை நொளம்பூரில் இன்று காலை பள்ளிக்கு சென்ற 7ம் வகுப்பு மாணவனை மர்ம கும்பல் ஒன்று கடத்தியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தக் கடத்தலுக்கான பின்னணிக் காரணத்தை போலீஸார் கண்டறிந்து விட்டனர். இதையடுத்து சிறுவனை பத்திரமாக மீட்கும் பணியில் போலீஸார் இறங்கியுள்ளனர்.
சென்னை அண்ணா நகரில் உள்ள லியோ மெட்ரிக் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் யோகேஸ்வரன். அவன் இன்று காலை தனது தம்பி ஜெயசூர்யாவுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று யோகேஸ்வரனை மட்டும் காரில் கடத்திச் சென்றது.
இதையடுத்து வீட்டுக்கு ஓடிய ஜெயசூர்யா தனது தாயாரிடம் இதைக் கூறினான். இதையடுத்து அவர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். இதையடுத்து யோகேஸ்வரனை மீட்கும் நடவடிக்கைகளை போலீஸார் முடுக்கி விட்டனர்.
கடத்தல் குறித்து ஜெயசூர்யா போலீசாரிடம் கூறுகையில்,
அண்ணனும், நானும் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தோம். அப்போது கருப்பு நிற ஸ்கார்பியோ கார் ஒன்று வந்தது. அந்த வண்டியின் பதிவு எண் 8989. அதில் இருந்து இறங்கி வந்த மர்ம கும்பல் அண்ணனைக் கடத்திச் சென்றது என்றான.
இதையடுத்து போலீசார் மர்ம கும்பலை வலைவீசித் தேடி வருகின்றனர். யோகேஸ்வரனின் தந்தை ரஜினிகாந்த் ஒரு தொழில் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. கடன் பிரச்சனையால் மாணவன் கடத்தப்பட்டிருப்பதாக தற்போது போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அதாவது ரஜினிகாந்த்தின் தம்பி, ரஞ்சன் பெருமளவில் கடன் வாங்கியுள்ளார். இதைத் திருப்பிக் கட்டாமல் இருந்து வருகிறார். இதையடுத்து இன்று காலை அவரது வீட்டுக்கு கடன் கொடுத்தவர்கள் வந்ததாக தெரிகிறது. அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர்தான் யோகேஸ்வரன் கடத்தப்பட்டுள்ளான்.
இதையடுத்து ரஞ்சனிடம் போலீஸார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது வீட்டுக்கு வந்தவர்கள் யார் என்பதை போலீஸார் கண்டுபிடித்து விட்டனர். எனவே இன்றைக்குள் சிறுவனை மீட்க நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இதேபோல ஒரு பள்ளிச் சிறுவன் கடத்தப்பட்டான். அவனை சென்னை போலீஸார் பெருமளவில் பணம் கொடுத்து மீட்டனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications