பழநியில் கேஸ் சிலிண்டர் கேட்டு போராட்டம்-பெண்கள் மீது போலீஸ் தடியடி
பழநி: பழநி தாழையூத்து அருகே கேஸ் சிலிண்டர் கேட்டு சாலை மறியல் செய்த பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பழநியை அடுத்த தாளையூத்தில் உள்ள வி.கே.மில்ஸ் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது. இவர்கள் (இண்டேன்) கேஸ் இணைப்பு பெற்று பயன்படுத்தி வருகின்றனர். கேஸ் சிலிண்டர் வேண்டி கடந்த 3 மாதங்களாக பதிவு செய்து காத்திருந்தும் சிலிண்டர் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அவர்கள் மண்ணெண்ணை மற்றும் கரண்ட் அடுப்புகளை பயன்படுத்தி வந்தனர். ஆனால் அவைகளால் தகுந்த நேரத்தில் சமையல் செய்ய முடியவில்லை. இதனால் ஆவேசமடைந்த சுமார் 100 பெண்கள், பழநி - உடுமலை சாலையில் காலி சிலிண்டர்களுடன் கும்மி அடித்து போராட்டம் நடத்தினர்.
இதனால் பழநி- உடுமலை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரகாந்தி சமரசம் செய்ய முயன்றார். ஆனால் பெண்கள் சமாதானம் அடைய மறுத்ததால், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications