சங்கரன்கோவிலில் மதிமுக வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைக்குமார்: வைகோ அறிவிப்பு

சங்கரன்கோவிலில் வரும் மார்ச் மாதம் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் அதிமுக சார்பில் முத்துச்செல்வியும், திமுக சார்பில் ஜவகர் சூரியகுமார் என்பவரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் மதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த 8 பேரிடம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேர்காணல் நடத்தினார். அதன் பிறகு ஆட்சிமன்ற கூட்டம் நடந்தது.
அதன் பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது,
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் மதிமுக சார்பில் வாசுதேவநல்லூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சதன் திருமலைக்குமார் போட்டியிடுவார். அவர் வரும் 24ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார். மறுநாள் அதாவது 25ம் தேதி சங்கரன்கோவிலில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. நான் அதில் கலந்து கொண்டு சதன் திருமலைகுமாரு்ககு ஆதரவாக பேசுகிறேன்.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பால் விலை மற்றும் பஸ் கட்டணம் உயர்ந்துள்ளது. என்ன தான் விலையை உயர்த்தினாலும் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் முடிவு அவர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் விதமாக இருக்கும். அரசு தவறான வழியில் சென்றால் அதை தூக்கி எறிவோம் என்பதை மக்கள் காட்டுவார்கள்.
சட்டசபையில் கருத்து தெரிவிக்க எங்களுக்கு பிரதிநிதி யாரும் இல்லை. எனவே, சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் எங்களுக்கு வெற்றியை அளித்து ஒரு பிரதிநிதியைத் தருவார்கள் என்று நம்புகிறோம்.
ஊழலற்ற அரசியலை கொடுக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்குமாறு மக்களிடம் கேட்போம். மத்திய அரசு தொடர்ந்து ஈழத்தமிழர்களை வஞ்சித்து வருகிறது. அத்தகைய அரசுடன் இருக்கும் திமுகவின் வேடத்தையும் மக்கள் மத்தியில் எடுத்துரைப்போம்.
திமுக, அதிமுகவுக்கு பதிலாக மக்கள் எங்களை தேர்வு செய்வார்கள். 26 அமைச்சர்கள் கொண்ட குழு சங்கரன்கோவிலில் தங்கி தேர்தல் பணி செய்கிறது. தமிழகத்தில் ஆட்சி ஒன்றும் மாறவில்லை, ஆட்கள் தான் மாறியிருக்கிறார்கள். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. மக்களுக்கு மதுவையும், இலவசங்களையும் கொடுத்து அவர்களை கெடுக்கிறார்கள். இந்த நிலை மாற அவர்கள் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்றார்.
சங்கரன்கோவிலில் இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து எதிர்கட்சிகள் நினைத்தால் ஒருமித்த முடிவுக்கு வரலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியது குறித்து கேட்டதற்கு வைகோ கூறுகையில், அவர் என்ன சொன்னார் என்று எனக்கு தெரியாது என்றார்.
மதிமுக வோட்பாளர் டாக்டர் சதன் திருமலைக்குமார் திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சிங்கிலிபட்டியைச் சேர்ந்தவர். 1996ம் ஆண்டு ராஜபாளையம் தொகுதியிலும், 2001ம் ஆண்டு சங்கரன்கோவில் தொகுதியிலும் மதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் மதிமுக இருந்த போது வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவர் மதிமுக ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications