இன்றும் 20 விமானங்கள் ரத்து - கிங்பிஷர் நோக்கம்தான் என்ன?

ஏற்கெனவே சிவில் விமான போக்குவரத்து இயக்ககம் (டிஜிசிஏ) விடுத்த எச்சரிக்கையையும் மீறி இந்த விமான ரத்து நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது கிங்பிஷர்.
சமீப காலமாக மிகுந்த சர்ச்சைக்குரிய விமான போக்குவரத்து நிறுவனமாக மாறியுள்ளது கிங்பிஷர்.
பல ஆயிரம் கோடி கடன் மற்றும் நஷ்டத்தில் இயங்குவதாக அதன் உரிமையாளர் விஜய் மல்லையா கூறினாலும், அவரது நோக்கம் வேறு என்றே கூறப்பட்டு வருகிறது.
சமீப காலமாக அடிக்கடி தனது விமானங்களை கணிசமாக ரத்து செய்து வருகிறது இந்த நிறுவனம். இது பயணிகளை மிகுந்த சிரமத்துக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிறுவன விமானிகள் கூண்டோடு விடுமுறை எடுப்பது அல்லது ராஜினாமா செய்வது சாதாரண செய்தியாகிவிட்டது.
மொத்தமுள்ள 64 விமானங்களில் இப்போதைக்கு 28 விமானங்களைத்தான் இந்த நிறுவனம் இயக்கிக் கொண்டிருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககத்துக்கு தகவல் அளித்துள்ளது.
எனவே உண்மையில் இயங்கும் இந்த 28 விமானங்களை இயக்கும் நேரப் பட்டியலை அளிக்குமாறு கேட்டிருந்தது டிஜிசிஏ.
கிங்பிஷர் நிர்வாகத்திடம் தாம் நடத்திய பேச்சுக்கள் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அஜீத் சிங்கைச் சந்தித்து தெரிவிக்கவுள்ளார் டிஜிசிஏ தலைவர் பாரத் பூஷன். இந்த நிலையில், இன்று 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மும்பையிலிருந்து மட்டுமே 14 விமானங்கள் ரத்தாகியுள்ளன.
இதைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்துக்குள், கிங்பிஷர் உண்மையில் இயக்கும் விமானங்களின் நேரப் பட்டியலை சமர்ப்பித்தாக வேண்டும் என டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் அடியோடு நிறுத்தப்பட்டிருந்த கொல்கத்தா செக்டாரில், விமானங்கள் படிப்படியாக இயக்க நிலைக்குத் திரும்புவதாக கிங்பிஷர் நிறுவனம் அறிவித்துள்ளது.
வரி செலுத்தாமல் டபாய்த்துக் கொண்டிருந்ததால் கடுப்பான வருமான வரித்துறை சமீபத்தில் கிங்பிஷரின் வங்கிக் கணக்குகளை முடக்கியது நினைவிருக்கலாம். இதனால் நேற்றுமட்டுமே 40 விமானங்கள் நிறுத்தப்பட்டன.
கடந்த ஆண்டு கிங்பிஷர் நிறுவனம் ரூ1027 கோடி நஷ்டத்தை சந்தித்தது. இந்த நிறுவனத்தின் கடன் ரூ 7,057.08 கோடியாக உள்ளது. இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ 444 கோடி நஷ்டம் என கணக்கு காட்டியுள்ளது கிங்பிஷர்.


Click it and Unblock the Notifications
