பொது நுழைவத் தேர்வுக்கு தமிழகம் எதிர்ப்பு: கல்வியமைச்சர்கள் மாநாட்டில் திட்டவட்டம்
டெல்லி: தொழிற்கல்விக்கான மாணவர் சேர்க்கையில் பொதுத்தேர்வு முறையை தமிழகம் ஆதரிக்காது என்று டெல்லியில் நடந்த மாநில கல்வி அமைச்சர்களின் மாநாட்டில் உயர் கல்வித்துறை அமைசச்ர் பி. பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
மாநில கல்வி அமைச்சர்களின் மாநாடு மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் தலைமையில் நேற்று டெல்லியில் நடந்தது. அதில் கலந்து கொண்ட தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பி. பழனியப்பன் பேசியதாவது,
தொழிற்கல்வி படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு மத்திய அரசின் பொது நுழைவுத் தேர்வு முறை சுமையாக உள்ளது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. இந்த பொது நுழைவுத் தேர்வால் கிராமப்புறங்களில் உள்ள பின்தங்கிய நிலையில் வாழும் மாணவர்களுக்கும், தமிழ் மொழி வாயிலாக பயின்றவர்களுக்கும் எந்த பலனும் இல்லை.
பொது நுழைவுத் தேர்வு முறைப்படி கடந்த 2005ம் ஆண்டில் 56.72 சதவீதம் பேரும், 2006ம் ஆண்டில் 58.26 சதவீதம் பேரும் தான் சேர்ந்துள்ளனர். அந்த முறையை நீக்கியதற்குப் பிறகு 68.79 சதவீதம் பேர் தொழிற்கல்விகளில் சேர்ந்தனர். அதனால் தான் பொது நுழைவுத் தேர்வுக்கு தமிழக முதல்வர் ஆதரவு தெரிவிக்கவில்லை.
தமிழக சட்டசபையிலும் பொது நுழைவுத் தேர்வுக்கு ஆதரவு தெரிவிப்பதில்லை என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு முன்வைக்கும் வரைவு குறித்து ஆய்வு செய்த பிறகே தமிழக அரசு தனது நிலையை தெரிவிக்க முடியும்.
மத்திய அரசு முன்வைத்துள்ள சமுதாயக் கல்லூரிகள் நிறுவும் திட்டம் தமிழக்த்தில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழகம் முன்னோடியாகவும் உள்ளது. இது குறித்த மத்திய அரசின் முடிவை வரவேற்கிறோம் என்றார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் என்.ஆர். சிவபதி பேசியதாவது,
தமிழகத்தில் உயர் கல்வி வகுப்புகளில் 12 வகை தொழிற்பயிற்சி படிப்புகள் உள்ளளன. சுமார் 1,86,094 மாணவர்கள் தொழிற்கல்வி படிப்புகள் பயின்று பலனடைகின்றனர். பயிற்சிக்கல்வி முடித்தவுடன் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தொழிற்சாலைகள் அதிகமுள்ள பகுதிகளில் சமுதாயக் கல்லூரிகள் அமைக்க வேண்டும் என்ற மத்திய மனித ஆற்றல் அமைச்சகத்தின் யோசனை குறித்து பரிசீலித்து பதில் அளிக்கிறோம்.
மாணவர்களுக்கு எளிமையான முறையில் பாடம் கற்பிக்கும் பயிற்சி முறை தமிழகத்தில் கடந்த 2002-03ம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதற்கேற்றபடி தான் பாடப்புத்தகங்களும் தயாரிக்கப்படுகின்றன. விளையாட்டுப் பொருட்கள், கார்டுகள் மூலம் பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையும் பின்பற்றப்படுகின்றது.
இதை மேலும் எளிமைப்படுத்த ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி இயக்குநரகம் முயற்சி செய்து வருகின்றது. மாநில அளவில் அனைவரும் கல்வி பெறும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வையும் தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது.
மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைத்து அவர்கள் மகிழ்ச்சியாக கல்வி கற்க வேண்டும் என்பதற்காக முப்பருவத் தேர்வு முறையை 1வது வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications