ஜெ பிறந்த நாள் கொண்டாட்டம்: 64 ஜோடிகளுக்கு திருமணம், 64 கிலோ கேக், 64 லட்சம் மரக்கன்றுகள்

சென்னையில் அதிமுக தலைமைக் கழகத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் 64 கிலோ எடையிலான பிறந்த நாள் கேக் கொண்டு வரப்பட்டது. அதில், ''கழக நிரந்தர பொதுச்செயலாளர் தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மாவின் 64-வது பிறந்த நாளான இன்று வாழ்த்தி வணங்குகிறோம்'' என்று எழுதப்பட்டிருந்தது.
அதிமுக அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் அந்த கேக்கை வெட்டி, நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு வழங்கினார். தொடர்ந்து நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் கேக் வழங்கப்பட்டது.
பிறந்தநாள் விழா மலரை விசாலாட்சி நெடுஞ்செழியன் வெளியிட மருத்துவர் அணிச் செயலாளர் டாக்டர் வேணுகோபால் எம்.பி. பெற்றுக் கொண்டார்.
இந் நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சபாநாயகர் ஜெயக்குமார் சார்பில் சென்னை வண்ணாரப்பேட்டை ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனையில் இன்று பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஜெயக்குமார் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களையும் பெற்றோர்களுக்கு பரிசு பொருட்களையும் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடந்தது. அதை ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
அதே போல தென் சென்னை மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மைத்ரேயன் எம்.பி. கலந்து கொண்டார்.
கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட திரு.வி.க.நகர் பஸ் நிலையம் அருகே நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 64 கிலோ கேக் வெட்டப்பட்டது. இதை டாக்டர் வேணுகோபால் எம்.பி. கேக் வெட்டினார். அவைத்தலைவர் மதுசூதனன் 640 பெண்களுக்கு புடவைகளை வழங்கினார்.
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கந்தன்சாவடி காளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. கண்ணகி நகரில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
திண்டுக்கல்லில் 64 ஜோடிகளுக்கு இலவச திருமணம்:
அதே போல திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 64 ஜோடிகளுக்கு இலவச திருமணம் இன்று நடந்தது.
திருமணத்தை அமைச்சர் விசுவநாதன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். 64 ஜோடிகளுக்கும் மாவட்ட அதிமுக சார்பில் கட்டில், பீரோ உள்பட 64 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
64 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டம்:
முன்னதாக தனது பிறந்த நாளையொட்டி மாவட்டந்தோறும் 2 லட்சம் மரக்கன்றுகள் வீதம் தமிழகம் முழுவதும் 64 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
சசிகலா இல்லாமல்..
போயஸ் தோட்டத்தை விட்டு சசிகலா அண்ட் கோ விரட்டப்பட்ட பிறகு முதல்வர் ஜெயலலிதா கொண்டாடும் முதல் பிறந்த நாள் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவுக்கு பிரதமர் வாழ்த்து:
இந் நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளான இன்று பிரதமர் மன்மோகன் சிங் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
தமிழக கவர்னர் ரோசய்யா முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கடிதம் மற்றும் பூங்கொத்தும் அனுப்பி தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
மோடி-துக்ளக் ஆசிரியர் சோ:
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணையமைச்சர் ஜோதிர்ராத்திய சிந்தியா, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ., இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு தமிழரசன், எம்.எல்.ஏ., தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி, துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி, உள்ளிட்டோர் பூச்செண்டு மற்றும் கடிதம் மூலம் தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications