சங்கரன்கோவில்: மின்னணு வாக்குப் பதிவு இயந்திர ஆய்வு முடிந்தது!
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தல் பணியில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு பணி முடிவடைந்தது.
சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தல் வரும் மார்ச் மாதம் 18ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.இடைத் தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தலுக்காக மொத்தம் 242 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இந்த ஓட்டுச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பெங்களூரு "பெல்' இன்ஜினியர் குழுவினர் ஆய்வு செய்து வந்தனர்.
கட்டுப்பாட்டு இயந்திரங்கள், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் இந்த ஆய்வு பணிகள் கடந்த 23ம் தேதி ஆரம்பமானது. நேற்று 3வது நாளாக இப்பணிகள் தொடர்ந்து நடந்து மாலையில் முடிவடைந்தது.
விரைவில் தேர்தல் பார்வையாளர்கள் வருகைக்கு பிறகு மீண்டும் இந்த இயந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டு பின்னர் சீல் வைக்கப்பட்டு "ரேண்டம்' முறையில் ஓட்டுச் சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும் தொகுதியில் உள்ள 242 ஓட்டுச் சாவடி தலைமை அலுவலர்களுக்கும் "சிம்' கார்டுகள் வழங்கப்படுகிறது.
24 மண்டல அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர், தொகுதி தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள், பறக்கும் படையினர் உட்பட சுமார் 300 பேருக்கு "சிம்' கார்டுகள் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் ஓட்டுப்பதிவு ஏற்பாடுகள், ஓட்டுப்பதிவு தொடங்கிய நேரம், 2 மணி நேரத்திற்கு ஒரு முறை ஓட்டுப்பதிவு நிலவரம், ஓட்டுப்பதிவு முடிவடையும் போது ஓட்டுப்பதிவு நிலவரம், ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் அந்த விபரங்கள் உட்பட அனைத்து தகவல்களையும் உடனடியாக அலுவலர்களுக்கு இடையே பரிமாறிக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் ஓட்டுப்பதிவை வீடியோ மூலம் பதிவு செய்யும் வகையில் வெப் காஸ்டிங் வசதியும் ஏற்படுகிறது. இதன் மூலம் ஓட்டுப்பதிவில் முறைகேடுகளை உடனடியாக தடுக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வசதி உண்டாகும்.












Click it and Unblock the Notifications