சங்கரன்கோவில் இடைத்தேர்தல்- 3 பார்வையாளர்கள் நியமனம்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் பார்வையாளர்களாக மூன்று பேரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. மேலும் இத்தொகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 6 லட்சத்து 27 ஆயிரத்து 360 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் கண்காணிப் பணியை மேற்கொள்வதற்காக 3 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிப்பதற்காக செலவு பார்வையாளராக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஜாம்நகர் சுங்கத் துறை துணை ஆணையர் பி.நரசிம்மராவ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவரை 09924956758, 9489051191 என்ற செல்போனில் தொடர்பு கொள்ளலாம்.
உத்தரகாண்ட் மாநில மறுசீரமைப்புத் துறை கூடுதல் செயலாளர் ரமேஷ்குமார் சுதன்சூ, பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் நெல்லை மாவட்ட தலைமையிடத்திற்கு 28-ந் தேதி இரவு வருகிறார். இவரை 07830010777 என்ற செல்போனில் தொடர்பு கொள்ளலாம்.
குஜராத் மாநிலம், பரோடா காவல்துறை அதிகாரி வி.ஜெ.கவுதம், போலீஸ் பார்வையாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் நெல்லை மாவட்ட தலைமையிடத்திற்கு 28-ந் தேதி இரவு வருகிறார். இவரை 09879200732 என்ற செல்போனில் தொடர்பு கொள்ளலாம்.
பணம் பறிமுதல்
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் நடத்தை விதிமுறைகள் மீறுவதைத் தடுப்பதற்காக பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழு போன்ற பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
சங்கரன்கோவில் தொகுதியில், நிலையான கண்காணிப்புக் குழுவினரால், 23-ந் தேதி சின்னகோவிலான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 2 லட்சத்து 89 ஆயிரத்து 960 ரூபாயும், 24-ந் தேதி கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாயும், சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 400 ரூபாயும், ஆக மொத்தம் 6 லட்சத்து 27 ஆயிரத்து 360 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
மேற்கண்ட வழக்குகள் வருமான வரித்துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications