தமிழக அரசின் ஒத்துழைப்புடன் கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் திறப்பு: நாராயணசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் ஒத்துழைப்புடன் கூடங்குளம் அணுமின் நிலையத்தை வெகுவிரைவில் திறப்போம் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்திபவனுக்கு வந்த நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கூடங்குளம் அணுமின் நிலையம் 2003-ல் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டு அதில் முதல் யூனிட்டில் 99 விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ளது. 2-வது யூனிட் (தலா 1000 மெகாவாட்) 2 மாத காலத்தில் உற்பத்தியை தொடங்கும். தமிழ்நாட்டில் தற்போது மின்பற்றாக்குறை 3500 மெகாவாட் உள்ளது. இதனால் பல மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

கூடங்குளத்தில் உற்பத்தியை தொடங்கும் முன் ஒரு சிலர் அணு உலை கூடாது என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். கல்பாக்கம் அணு உலை 15 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் வல்லுநர் குழு, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், தமிழக அரசின் வல்லுநர் குழு ஆகியோர் கூடங்குளம் அணு மின் நிலையத்தை பார்வையிட்டு அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது
என்று கூறிவிட்டனர். அதனை எல்லாம் ஏற்காமல் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்கள் இதனை ஏற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட வேண்டும்.

தொண்டு நிறுவனங்கள்

போராட்டக்குழு வாகனங்களில் ஆட்களை அழைத்துவருவது, அவர்களுக்கு உணவு வழங்குவது என்று நிறைய செலவு செய்து கொண்டிருக்கின்றனர். அந்த பகுதியில் 12 தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று விசாரணை நடத்தி, 6 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அவர்களது கணக்குகளை சரிபார்த்தபோது சந்தேகத்தை ஏற்படுத்திய 3 நிறுவனங்களின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது. அவர்கள் வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுவதை தடை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது சி.பி.ஐ. 2 வழக்கும், மாநில அரசு 2 வழக்கும் பதிவு செய்துள்ளது. மறுவிசாரணையை இப்போது தொடங்கியிருக்கிறோம்.

இந்தியாவில் 20 அணுமின் நிலையங்களில் 19 நிலையங்கள் மூலம் 4700 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது 3 விழுக்காடுதான்தான். அமெரிக்காவில் 1 லட்சம் மெ.வா., ரஷியாவில் 20 சதவீதம், பிரான்சில் 68 சதவீதம், ஜப்பானில் 26 சதவீதம், தென்கொரியாவில் 10 சதவீதம் சீனாவில் 30 ஆயிரம் மெ.வா. மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பாகிஸ்தான் சீனா உதவியுடன் 2 அணு உலைகளை கட்டி வருகிறது.

இப்படியிருக்க உள்நோக்கம் காரணமாக நாட்டின் நலனை கருத்தில் கொள்ளாமல் ஒரு சிலர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் தமிழக மக்கள் அணு உலையை திறந்து மின் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று கடிதம் எழுதி வருகிறார்கள்.

முதலில் அறப்போராட்டம் நடத்துகிறோம் என்று கூறிய அவர்கள் இப்போது அராஜக வழியில் வாகனங்களை தடுப்பது, விஞ்ஞானிகள், ஊழியர்களை உள்ளே செல்லவிடாமல் தடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்கள் மீது தமிழக அரசு 156 வழக்குகள் போட்டுள்ளது. அதன் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும். மாநில அரசின் குழு அறிக்கை அளித்துவிட்ட நிலையில் இப்போது மத்திய அரசு அதிகாரிகள் அணுமின் நிலையத்தை திறப்பது தொடர்பாக மாநில அதிகாரிகளுடன் பேசி வருகிறார்கள்.

தமிழக அரசு மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. தமிழக அரசு நல்ல முடிவை எடுக்கும் என்று கருதுகிறேன். மாநில அரசின் ஒத்துழைப்போடு வெகுவிரைவில் திறப்போம்.

ஜெர்மனி பிரமுகர் ஹெர்மன் சுற்றுலா விசாவில் இந்தியா வந்துவிட்டு அந்த பகுதியில் தங்கியிருந்து போராட்ட குழுவினருடன் தொடர்பு வைத்திருந்தார். அவரது லேப்-டாப்பில் கூடங்குளம் அணு மின் நிலைய வரைபடம் இருந்துள்ளது.

போதுமான ஆதாரங்கள் கிடைத்தவுடன் தேவைப்பட்டால் அவரை மீண்டும் அழைத்து விசாரணை நடத்துவோம். தொண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு நிதி உதவி செய்யவில்லை என்று தான் அமெரிக்கா கூறியுள்ளது. அங்குள்ள தொண்டு நிறுவனங்கள் நிதி உதவி செய்ததா? இல்லையா? என்று கூறவில்லை.

தொழிலதிபர் உதவி?

தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாக கூறுவது தவறு. எங்களுக்கு பூரண ஒத்துழைப்பு தருகிறது. தமிழக அரசும் தனது தேவையை உணர்ந்திருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை மாநில அரசின் கையில் உள்ளது.

மாநில அரசின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் நாங்கள் தலையிட மாட்டோம். போராட்டக்குழுவினருக்கு அங்குள்ள தொழில் அதிபர் நிதி உதவி செய்கிறாரா? என்பது பற்றி உள்துறை விசாரித்து வருகிறது. விசாரணையில் இருக்கும்போது நான் எதுவும் சொல்லக்கூடாது.

அரியானா (6000மெ.வா.), ராஜஸ்தான் (4000மெ.வா.), கர்நாடகா போன்ற மாநிலங்கள் அணுமின் நிலையத்தை தொடங்க முன்வந்துள்ளன. இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து தான் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய அணு மின் நிலையத்தில் ரூ.2.45ம் அனல்மின் நிலையத்தில் ரூ.3.60ம், சோலார் ரூ.16ம், காற்றாலை ரூ.6ம் ஆகிறது. எனவே
அணுமின் உற்பத்தி தான் மிக குறைந்த செலவு.

இலங்கைக்கு எதிர்ப்பு

இலங்கை மனித உரிமை மீறல் பிரச்சினை குறித்து அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் என்ன என்று தெரியவில்லை. நானும், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனும் பிரதமரிடம் அப்படி அமெரிக்கா மனித உரிமை மீறலுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தால் ஆதரிக்க வேண்டும் என்ற தமிழக மக்களின் உணர்வுகளையும், தமிழக காங்கிரஸ் கட்சியின் உணர்வுகளையும் வலியுறுத்தி இருக்கிறோம்.

இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சரும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் முதல்வரும் டி.ஆர்.பாலு மூலமாக அந்த கருத்தை வலியுறுத்தியுள்ளார். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே கருத்தை வலியுறுத்தி வருகின்றன. கண்டிப்பாக மத்திய அரசு இலங்கை மட்டுமல்ல எங்கு மனித உரிமை மீறல்கள் இருந்தாலும் அதனை கண்டித்து தீர்மானம் கொண்டுவந்தால் அதை ஆதரிக்கும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+