அடுத்த உ.பி. முதல்வர் அகிலேஷ்? தீயாய் பரவும் வதந்தி
லக்னோ: உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமான அகிலஷே யாதவ் தான் முதல்வராக வேண்டும் என்று அக்கட்சியினர் நினைக்கின்றனர்.
உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் 224 இடங்களை முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி அமோக வெற்றி பெறக் காரணம் முலாயமின் மகன் அகிலேஷ் யாதவ் தான். அவர் கட்சி சின்னமான சைக்கிளில் ஒரு சிவப்புத் தொப்பி அணிந்து கொண்டு பிரச்சாரம் செய்த விதம் இளைஞர்களை பெரிதும் கவர்ந்தது.
முதல்வர் மாயாவதி இன்று காலை ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். இந்நிலையில் அடுத்த முதல்வர் யார் என்பதை இன்னும் 3 நாட்களில் அறிவிப்பதாக சமாஜ்வாடி கட்சி தெரிவித்துள்ளது. கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தான் அடுத்த முதல்வர் என்று சமாஜ்வாடி கட்சியும், அகிலேஷும் நேற்று தெரிவித்தனர். இருப்பினும் கட்சி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த அகிலேஷ் தான் முதல்வராக வேண்டும் என்று கட்சியினர் பலர் விரும்புகின்றனர்.
சமாஜ்வாடிக்கு வாக்களித்தவர்கள் எல்லாம் அகிலேஷுக்காகத் தான் வாக்களித்தனர். அப்படி இருக்கையில் அவரை முதல்வராக்கவில்லை என்றால் அது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திவிடும் என்று பலர் கருதுகின்றனர். ஆனால் வெறும் 38 வயதேயான அகிலேஷால் சாதிப் பிரச்சனை, குற்றம், வறுமை, அறியாமை, ஊழல் போன்ற பிரச்சனைகளை சமாளிக்க முடியாது என்பது சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர்களின் நினைப்பு.
இந்நிலையில் அகிலேஷ் தான் அடுத்த முதல்வர் என்ற வதந்தி காட்டுத்தீ போன்று பரவி வருகின்றது.












Click it and Unblock the Notifications