வினோத்குமாருடன் அம்மா சண்டை போட்டார்... அல்போன்சா மகள் பரபரப்பு தகவல்!
வினோத்குமாருக்கும் தனது தாயார் அல்போன்சாவுக்கும் இடையே சண்டை நடந்ததாக அல்போன்சாவின் மகள் ஆலியா போலீஸாரிடம் தெரிவித்துள்ளதால் இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
அல்போன்சாவைத் திருமணம் செய்து கொள்ளாமலேயே அவருடன் விருகம்பாக்கம் வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார் கல்பாக்கத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவருடைய மகன் வினோத்குமார். இவரும் ஒரு வளரும் நடிகர்தான், டான்ஸரும் ஆவார். கவசம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அல்போன்சா வீட்டில் இவர் தூக்கில் பிணமாகத் தொங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வினோத்குமார் உடலைக் கைப்பற்றிய போலீஸார் தற்கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் இது கொலையாகத் தெரியவில்லை, தற்கொலை போலத்தான் தெரிவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான் இது உறுதிப்படுத்தப்படும்.
மறுபக்கம் வினோத்குமாரின் குடும்பத்தினர், அல்போன்சா, அவரது தம்பி ராபர்ட் ஆகியோர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தி போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். அதையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அல்போன்சா கொடுத்த வாக்குமூலத்தைப் போலீஸார் பரிசோதித்தபோது அதில் பெரும்பாலானவை சரியாக இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, வினோத்குமார் மரணத்தைத் தொடர்ந்து தனது வீட்டுக்குள்ளிருந்து வெற்று உடம்பில் சுற்றிய துண்டுடன் தான் வெளியே ஓடி வந்து அக்கம்பக்கத்தினரை அழைத்ததாக கூறியிருந்தார் அல்போன்சா. அவரது வீடு உள்ள தளத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவிலும் இது பதிவாகியுள்ளது. எனவே அது உண்மைதான் என்று தெரிய வந்துள்ளது.
அதேசமயம், தனக்கும், வினோத்குமாருக்கும் சண்டை எதுவும் இல்லை, அவருடைய தாயாருடன்தான் அவர் கடும் சண்டை போட்டார். அதன் பின்னர் அவரை சமாதானப்படுத்த தான் அவரை படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு சந்தோஷமாக இருந்ததாகவும் கூறியுள்ளார் அல்போன்சா. இங்குதான் குழப்பம் ஏற்பட்டுள்ளது. காரணம், அல்போன்சாவின் மகள் ஆலியா கூறியுள்ள தகவல்.
அதாவது தனது தாயாருக்கும், வினோத்குமாருக்கும் இடையே சண்டை நடந்ததாக கூறியுள்ளாள் ஆலியா. இதனால் போலீஸார் அல்போன்சாவை தீவிரமாக விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். சண்டை வீட்டுக்குள் எப்போது நடந்தது, என்ன காரணத்திற்காக நடந்தது என்பதை அறிந்த பின்னரே, அல்போன்சாதான் வினோத்குமாரின் மரணத்திற்குக் காரணமா என்ற முடிவுக்கு வர முடியும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், அல்போன்சா உடனே தற்கொலைக்கு முயலாமல், போலீஸார் விசாரணைக்கு அழைப்பார்கள் என்ற நிலை வந்த பிறகுதான் தூக்க மாத்திரை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதுவும் போலீஸாரை சந்தேகப் பார்வை பார்க்க வைத்துள்ளதாக தெரிகிறது.
மொத்தத்தில் அல்போன்சா வந்து வாயைத் திறந்து ஏதாவது சொன்னால்தான் இந்த வழக்கின் குழப்பம் தீரும் என்கிறார்கள் போலீஸார்.












Click it and Unblock the Notifications