மைசூர் பொறியியல் கல்லூரியில் மூக்கை உடைத்துக் கொண்ட அகிலேஷ் யாதவ்!

மைசூரில் உள்ள ஸ்ரீஜெயசமரஜேந்திரா பொறியியல் கல்லூரியில்தான் அகிலேஷ் சுற்றுச்சூழல் பொறியியல் பட்டம் பெற்று 1994-ம் ஆண்டு வெளியேறினார். இப்போது இந்த கல்லூரிக்கு பொன்விழா ஆண்டு. ஜூன் மாதம் தொடங்கும் கல்லூரியின் பொன்விழா ஆண்டு சிறப்பு விருந்தினர் சாட்சாத் அகிலேஷ்தான்!
அகிலேஷின் கல்லூரி நாட்களை நினைவு கூர்ந்து கல்லூரியின் முதல்வர் ஜி. சங்கமேஸ்வர் கூறியதாவது:
நாடே எதிர்பார்த்த தேர்தலில் சூறாவளியாக பிரச்சாரம் செய்த அகிலேஷ், கல்லூரி மாணவர் தேர்தல்களில் பங்கேற்றதுகூட கிடையாது.. மிகவும் அமைதியான மாணவராகவே வலம் வந்தார்.
இந்த ஆண்டு எமது கல்லூரிக்கு பொன்விழா. எமது பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அகிலேஷ் யாதவை அழைக்க நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். அகிலேஷ் எங்களது முன்னாள் மாணவர் என்பதில் பெருமை கொள்கிறோம் என்றார்.
இதேபோல் கருத்துத் தெரிவித்துள்ள துணை முதல்வரான சகீப் உர் ரஹமான், கல்லூரி படிப்பை முடித்துவிட்டு உத்தரப்பிரதேச அரசியலில் தனக்கென ஒரு இடத்தை அகிலேஷ் உருவாக்கிக் கொண்டிருப்பது ஆச்சரியமளிக்கக் கூடியதாகவும் இருக்கிறது என்றார்.
இவை மட்டும்தானா அகிலேஷுக்கும் மைசூர் பொறியியல் கல்லூரிக்குமான உறவு? இன்னொரு சுவாரசியமான தகவல், அகிலேஷின் மூக்குடன் தொடர்பு கொண்டது!
இது பற்றி அகிலேஷுக்கு ஓராண்டு சீனியராக இருந்தவரும் உத்தரப்பிரதேசத்தின் பரேலி பல்கலைக் கழகத்தின் தற்போதைய உதவிப் பேராசிரியருமான எம்.எஸ். கருணா கூறியதாவது:
எங்கள் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது பந்தை நான் உதைத்தேன். பந்து நேராக போய் அகிலேஷின் மூக்கை பதம் பார்த்தது.
உடைந்து போன அகிலேஷின் மூக்கை ஒட்ட வைக்கவே முடியலை...இப்பொழுதும் கூட மைசூரை அகிலேஷ் நினைத்தாலே தன்னிச்சையாகவே அவரது விரல்கள் மூக்கு பக்கம் திரும்பும்...
அகிலேஷுக்கு இப்பவும் நான் நல்ல நண்பன். குழந்தை உள்ளம் கொண்டவர். கல்லூரி வகுப்புகள் முடிந்த பிறகு பேருந்து நிறுத்தத்தில் நான் நிற்கும்போது திறந்த ஜீப்பில் வந்து என்னை அழைத்துச் செல்வார்.
பரேலிக்கு அகிலேஷ் வந்தால் என்னுடன் சிறிது நேரம் செலவிடுவார். பிஷியான தேர்தல் பிரச்சாரத்தின்போதுகூட என்னுடன் 30 நிமிடம் அவர் செலவிட்டார்..." என்று நெகிழ்கிறார் கருணா. அகிலேஷின் மூக்கு இப்போதும் மைசூரில் விழுந்த அடியால் வளைந்தே இருக்கிறது!
மைசூரில் மூக்கு உடைந்தால் என்ன, உ.பியில் ராகுல் காந்தியை நாக் அவுட் செய்து விட்டாரே அகில்...!












Click it and Unblock the Notifications