அண்ணா நூலகம் மாற்றம் என்பது அரசு கொள்கை முடிவு: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு
சென்னை: கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்வது என்ற மாநில அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்துக்கு மாற்றுவது என்று தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான அரசாணை கடந்த 2.11.2011 அன்று வெளியிடப்பட்டது.
இதனை எதிர்த்து வழக்கறிஞர்கள் பி. புகழேந்தி, ஆர். பிரபாகரன், ஓய்வுபெற்ற ஆசிரியை எஸ்.டி. மனோன்மணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், கவிஞர் இளையபாரதி, மூத்த வழக்குரைஞர் ஆர். காந்தி உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்வது என்ற தமிழக அரசின் அரசாணைக்கு 4.11.2011 அன்று இடைக்காலத் தடை விதித்தது.
கொள்கை முடிவில் தலையிடமுடியாது
இந்நிலையில், தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில், மாநில பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி. சபீதா பதில் மனு தாக்கல் செய்தார்.
டி.சபீதா தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக சட்டப் பேரவையின் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1.11.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை டி.பி.ஐ. வளாகத்தில் அமைக்கப்படவுள்ள அறிவுசார் பூங்காவுக்கு மாற்றுவது என்று கொள்கை
முடிவு எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக 2.11.2011 அன்று அரசாரணை வெளியிடப்பட்டது. டி.பி.ஐ. வளாகத்தில் அமையவுள்ள ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்காவில் மிகவும் நவீனமயமான நூலகம் ஒன்றை உருவாக்குவது, இந்த நூலகத்துக்கான கட்டுமானப் பணிகள் முடிந்தவுடன் கோட்டூர்புரத்தில் உள்ள நூலகத்தை டி.பி.ஐ. வளாகத்துக்கு மாற்றுவது, கோட்டூர்புரத்தில் நூலகம் உள்ள இடத்தை குழந்தைகளுக்கான பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அமைப்பதற்காக சுகாதாரத் துறையிடம் ஒப்படைப்பது என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
ஏராளமான பள்ளிகள், மிகச் சிறந்த கல்லூரிகள் உள்ள பகுதிகளுக்கு மத்தியில் டி.பி.ஐ. வளாகம் உள்ளது. மேலும், அருகிலேயே கன்னிமரா நூலகம் போன்ற மிகச் சிறந்த நூலகங்கள் உள்ளன. டி.பி.ஐ. வளாகத்தில் மாதம்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பல்வேறு பயிற்சிகளுக்காக வந்து செல்கின்றனர்.
ஆகவே, கல்விக்கான மையப் பகுதியாகத் திகழும் டி.பி.ஐ. வளாகத்தில் அமையவுள்ள அறிவுசார் பூங்காவில் அண்ணா நூற்றாண்டு நூலகமும் இடம்பெற்றால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகப் பெரும் பயன் கிடைக்கும்.
மாறாக, தற்போதைய கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு தினமும் 1,000 முதல் 1,300 பேர் மட்டுமே வந்து செல்கின்றனர். நூலகக் கட்டடத்தை வேடிக்கைப் பார்ப்பதற்காக வருவோரும் இந்த எண்ணிக்கையில் அடக்கம்.
மாறாக டி.பி.ஐ. வளாகத்துக்கு இந்த நூலகத்தை மாற்றினால் இன்னும் ஏராளமானோர் பயன் பெறுவார்கள்.
ஆகவேதான், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கோட்டூர்புரத்திலிருந்து நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்துக்கு மாற்றுவது என்று மாநில அரசு கொள்கை முடிவு எடுத்தது. மாநில அரசின் இந்த கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நூலக வசதிகள் குறைப்பதாக புகார்
இதற்கிடையே மனுதாரர்களில் ஒருவரான கவிஞர் இளையபாரதி கூடுதல் மனு ஒன்றை நீதிமன்றத்திóல் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விவாதத்தில் அவர் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி. வில்சன் ஆஜரானார்.
இளையபாரதி தாக்கல் செய்த கூடுதல் மனு விவரம்:
அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் எதையும் குறைக்கக் கூடாது என்று கடந்த ஜனவரி 19-ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும் நூலக செயல்பாடுகளை முடக்கும் விதத்தில், ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த பல வசதிகளை அரசு குறைத்து வருகிறது. ஆகவே, இது பற்றி ஆராய்ந்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் விதத்தில் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்திட வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இது பற்றி தமிழக அரசு தனது பதிலை தெரிவிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications