ஜெயலலிதாவை திருத்த திமுகவுக்கு வாக்களியுங்கள்: ஜி.கே. வாசன்

சங்கரன்கோவிலில் நடந்த ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், மாற்றம் வரும் என்பதற்காக அதிமுகவுக்கு வாக்களித்தீர்கள். மாற்றத்துக்குப் பதிலாக ஏமாற்றம்தான் கிடைத்துள்ளது. ஓர் ஆட்சியின் செயல்பாட்டை, சாதனையை, ஆள்வோரின் திறமையை மதிப்பிட 9 மாதம் என்பது அதிகம். அதிமுக ஆட்சியில் சாதனைகளைவிட வேதனைகளே அதிகம்.
ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த திட்டங்கள் எல்லாம் முடங்கிக் கிடக்கின்றன. புதிய திட்டங்கள் ஏதும் தீட்டப்படவில்லை. சமச்சீர் கல்வி கிடப்பில் போடப்பட்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் செயல்பாட்டுக்கு வந்தது.
பஸ், பால் கட்டண உயர்வால் மக்கள் அவதிப்படுகின்றனர். மின்வெட்டால் தமிழகம் இருண்டு கிடக்கிறது. இதில் மின்கட்டணம் வேறு உயரப் போகிறதே என்ற பயத்தில் மக்கள் உள்ளனர். இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்வதால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஆனால், ஆட்சியாளர்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த இத் தேர்தல் உதவும். அதைச் செயல்படுத்த இதுவே சரியான தருணம்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. 2011-2012 தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் தமிழகத்துக்கு ரூ. 24,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது திமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியை விட கூடுதலான நிதியாகும்.
சென்னை, எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்கள் 33 ஆயிரம் கோடியில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன.
கூடங்குளம் அணு உலையை ஆராய்ந்த 9 துறையை சேர்ந்த வல்லுனர்கள் அடங்கிய விஞ்ஞானிகள் குழு அணு உலை உயர்ரக நவீன பாதுகாப்புடன் திகழ்வதாக அறிக்கை அளித்துளது. ஆனால் அணு உலையை திறக்க விடாமல் எதிர்ப்பாளர்கள் என்ற போர்வையில் ஒரு கூட்டம் தடுத்து வருகிறது. தமிழக அரசு அந்த கூட்டத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். இல்லையேல் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
தமிழகத்தில் 11 மணி நேரம் மின் வெட்டு உள்ளது. இந்த நிலை மாற கூடங்குளம் அணு உலை திறக்கப்பட வேண்டும். தமிழகத்தில் ஆட்சியாளர்களுக்கு இந்த தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications