மணல் கடத்தலை தடுத்த வாலிபர் லாரி ஏறறிக் கொலை
திசையன்விளை: மணல் கடத்தலை தடுத்த வாலிபர் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.
திசையன்விளை அருகே நம்பியாற்றில் கிடைக்கும் மணலுக்கு கேரளாவில் கடும் மவுசு இருப்பதால் இரவோடு இரவாக லாரிகளில் மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்பு மணல் கடத்தலை தடுக்க உருமன்குளம், பொட்டைகுளம் விலக்கில் போலீஸ் மற்றும் வருவாய்துறையினர் இணைந்து செக்போஸ்ட் அமைத்திருந்தனர். தற்போது அது இயங்காததால் ஆற்றில் மணல் திருடுபவர்கள் பயமின்றி தராளமாக மணல் திருடி செல்கின்றனர்.
நம்பியாற்றை சுற்றியுள்ள ஊர்களில் பலர் மாட்டு வண்டி வைத்து மணல் கடத்தலை தங்கள் தொழிலாக வைத்துள்ளனர். இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை மணல் திருட்டு நடக்கிறது. லாரிகளில் மணல் கடத்தும் முக்கிய பிரமுகர்கள் தங்கள் காரில் போலீஸ் நடமாட்டம் உள்ளதா என்பதை நோட்டமிட்டு சிக்னல் கொடுத்த பின்னர் லாரிகள் ஊருக்குள் நுழைகின்றன. பொதுவாக போலீஸ் கண்காணிப்பு குறைந்த நேரமான அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை தான் இந்த கடத்தல் நடக்கிறது.
இன்று அதிகாலை நம்பியாற்றில் ஒரு கும்பல் லாரியில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். இதனை அறிந்த மிட்டாதார்குளம் எஸ்டாக் வின்செண்ட் மகன் சதிஷ்குமாரன் என்பவர் ஊர்மக்களுக்கு தகவல் கொடுத்தார். பிறகு வின்செண்ட் மற்றும் அவரது நண்பர்கள் பைக்கிலும் ஊர் மக்கள் 20 பேர் திரண்டு நம்பியாறு பகுதிக்கு சென்றனர். அங்குள்ள இரு சாலைகளிலும் சதிஷ்குமாரன், நண்பர்கள் ஒரு சாலையிலும், பொதுமக்கள் மற்றொரு சாலையிலும் மறித்து நின்றனர். அதே வேளையில் அங்கிருந்து வந்த மணல் லாரி சதிஷ்குமரான் நின்ற சாலையில் வேகமாக வந்து அங்கிருந்தவர்கள் மீது மோதுவது போல் வந்தது. இதில் சதிஷ்குமாரன் மீது லாரி மோதி அவர் தூக்கி வீச்ப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். லாரியை ஓட்டிய டிரைவர் தலைமறைவாகி விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் லாரியை முற்றுகையிட்டனர். சதிஷ்குமாரன் உடலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பொதுமக்கள் மற்றும் சதிஷ்குமாரனின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து சாலை மறியிலில் ஈடுபட்டனர். இதனையடுதது வள்ளியூர் டிஎஸ்பி, ராதாபுரம் தாசில்தார் சுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு நடத்தினார். பின்பு சாலை மறியல் கைவிடப்பட்டது. லாரி கிளினர் அருள் ராஜ் என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications