ஆப்கனில் 16 பேரை சுட்டுக் கொன்று, எரித்த யு.எஸ். வீரர்: பழிவாங்கத் துடிக்கும் தாலிபான்கள்
கந்தஹார்: ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் அமெரிக்க வீரர் ஒருவர் 16 ஆப்கானிஸ்தானியர்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றுள்ளார். இந்த கொடூரச் செயலுக்கு பழி வாங்காமல் விடப்போவதில்லை என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க வீரர் ஒருவர் ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தின் பஞ்ச்வாயி மாவட்டத்தில் உள்ள 2 கிராமங்களில் உள்ள 3 வீடுகளில் இருந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்பட 16 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்று அவர்களின் உடல்களை தீ வைத்து எரித்துள்ளார். இது தொடர்பாக ஒரு வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக நேட்டோ தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தால் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் ஆத்திரமடைந்துள்ளார்.
கடந்த மாதம் அமெரிக்க படைவீரர்கள் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை எரித்ததால் அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான உறவு பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க வீரர் ஒருவர் 16 பேரை சுட்டுக் கொன்று எரித்துள்ளது ஏற்கனவே பாதிக்கப்ட்டுள்ள உறவை மேலும் பாதிக்கச் செய்துள்ளது.
இது குறித்து செய்தியாளர் ஒருவர் கூறியதாவது,
ஒரு வீட்டின் அறையில் பெண்கள், குழந்தைகள் உள்பட 10 பேர் எரிந்து கிடந்தனர். இன்னொரு வீட்டு வாசலில் ஒரு பெண் இறந்து கிடந்தார். கொல்லப்பட்டவர்களில் 2 அல்லது 3 வயதுள்ள குறைந்தது 2 குழந்தைகளும் அடக்கம். அல்கோசாய் கிராமத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். அந்த கிராமத்திற்கு அருகில் உள்ள நாஜீபானில் மேலும் 4 பேர் கொல்லப்பட்டனர்.
கடவுளே, கர்சாயின் ஒரே மகன் கொல்லப்படட்டும். அப்போது தான் அவருக்கு எங்கள் வேதனை புரியும் என்று வயதான பெண் ஒருவர் கத்திக் கொண்டிருந்தார் என்றார்.
2 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நேற்று அதிகாலையில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலைகளை ஒரேயொருவர் தான் செய்தாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த கர்சாய் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பழிக்குப் பழி வாங்கப்போவதாக தாலிபான்கள் தெரிவி்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications