இனி கிங்பிஷருக்கு எஸ்பிஐ எந்த லோனும் தராது!-பிரணாப் முகர்ஜி
டெல்லி: கிங்பிஷர் நிறுவனத்துக்கு புதிய கடன்கள் தரும் திட்டம் எதுவும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு இல்லை என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மோசமான நிர்வாகம் காரணமாக நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் கிங்பிஷருக்கு பொதுத்துறை நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கிதான் அதிக கடன்கள் கொடுத்துள்ளது. மேலும் புதிய கடன்களைத் தரவும் திட்டமிருப்பதாகக் கூறப்பட்டது.
இதுகுறித்து பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, "கிங்பிஷருக்கு பெயில் அவுட் தர ரூ 1500 கோடி தர எஸ்பிஐ திட்டமிட்டிருப்பதாக கூறப்படுவது உண்மையல்ல. வரும் மார்ச் 31-ம் தேதி கிங்பிஷரின் கணக்கு முடிக்கப்படும்போது, அதன் உண்மையான கடன், அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கி அளவு பற்றியெல்லாம் தெரியவரும். அதற்கு முன் அதனை வெளியிடுவது சாத்தியமில்லை.
இப்போதைக்கு புதிய கடன்கள் எதையும் கிங்பிஷருக்கு எஸ்பிஐ வழங்காது. அதேநேரம், எஸ்பிஐ தலைமையிலான 8 வங்கிகள், கிங்பிஷர் நிறுவன கணக்கு கணக்குகளை கண்காணித்து வருகின்றன," என்றார்.












Click it and Unblock the Notifications