தேசிய அளவில் 3வது அணி என்பது சாத்தியமா? இல்லையா?
டெல்லி: 5 மாநிலத் தேர்தல் முடிந்த நிலையில் நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல், 3வது அணி அமைக்க முயற்சி என்றெல்லாம் ஊகங்கள் ரெக்கை கட்டிப் பறக்கும் நிலையில் இத்தகையதொரு அணி சாத்தியம்தானா? என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு தலைமை தாங்குகிற காங்கிரஸ், உத்தரப்பிரதேசத்தில் படுதோல்வியடைந்த போதும் இடைத்தேர்தல் பற்றியோ 3-வது அணி பற்றியோ எந்த ஒரு அலட்டலையும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
எப்போதும்போல தமக்கு இன்னமும் திராணி இருக்கிறது என்ற ரீதியிலேயே செயல்பட்டு வருகிறது. இதைத்தான் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங்கும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் எந்த ஒருநிலைமையையும் எதிர்கொள்ளத் தேவையான போதுமான உறுப்பினர்கள் எண்ணிக்கை தமது அரசுக்கு இருக்கிறது என்று பகிரங்கமாகவே பேசியிருக்கிறார் மன்மோகன் சிங்.
நாடாளுமன்றத்தில் எந்த ஒரு மசோதாவையும் நிறைவேற்ற போதுமான ஆதரவு தங்களுக்கு இருக்கிறதே என்பதே மத்திய அமைச்சர்களின் கருத்தாகவும் உள்ளது.
தீவிரவாத தடுப்பு மையம்
3வது அணி என்ற ஊகத்துக்கு முதலில் வித்திட்டது தேசிய தீவிரவாத தடுப்பு மையம்தான். ஆளும் ஐ.மு.கூட்டணி அரசின் தோழமைக் கட்சிகள் கூட மத்திய அரசின் இம்முடிவை எதிர்த்தன. குறிப்பாக திரிணாமூல் காங்கிரஸ் இதை கடுமையாக எதிர்த்தது.
காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இத்தகைய எதிர்ப்புக் குரல் விஸ்வரூபமெடுத்த நிலையில் மத்திய அரசை எதிர்க்கும் அதிமுக, பிஜூ ஜனதா தளம் போன்றவை இணைந்து மூன்றாவது அணியை உருவாக்கும் என்று கூறப்பட்டது.
இன்னும் ஒருபடி மேலேபோய் தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிஸ்ஸா, மேற்குவங்கம் என்று கிழக்குக் கடற்கரையோரமாக உள்ள மாநிலங்கள் இணைந்து ஈசிஆர் அணி அதாவது கிழக்குக் கடற்கரையோர மாநிலங்களின் கூட்டணி உருவாகும் கூட என்று கணிக்கப்பட்டது.
உச்சபட்சமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் மத்திய அமைச்சருமான தினேஷ் திவேதி, நாடாளுமன்றத்துக்கான இடைத்தேர்தல் நடைபெற்றால் மகிழ்ச்சி என்று கொளுத்திப் போட்டார்
திரிணாமூல் அமைதி
மத்திய அமைச்சராக உள்ள தமது கட்சியின் தினேஷ் திவேதி இத்தகைய ஒரு கருத்தை வெளிப்படுத்தியிருந்தபோதும் மம்தாவோ மத்திய அரசை ஆதரிக்கும் மனோநிலையிலேயே உள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் படுதோல்வியடைந்த மாயாவதியோ, இனியும் காங்கிரசை எதிர்ப்பது பயனில்லை என்று கருதி தடாலடியாக உத்தர்காண்ட்டில் கேட்காமாலேயே காங்கிரசுக்கு பகிரங்க ஆதரவை தர இப்போது அரியணை ஏறுகிறது காங்கிரஸ் கட்சி.
இதேபோல் 3-வது அணிக்கு காரணகர்த்தாவாக இருப்பவர் என்று கணிக்கப்பட்ட ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளமோ, 3வது 4-வது அணி எல்லாம் இல்லை,, கூட்டாட்சி அணிதான் என்று கூறிவிட்டது.
தற்போதைய சூழ்நிலையில் எந்த ஒரு காங்கிரஸின் தோழமைக் கட்சியும் சரி, காங்கிரஸுக்கு வெளியே இருந்து ஆதரவளிக்கும் கட்சியும் சரி மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றோ அல்லது 3-வது அணி என்ற பலப்பரீட்சையில் இறஙகவோ தயாராக இல்லை என்பதே வெளிப்படையான உண்மை.
மேலும் 3வது அணி உருவானால் யார் தலைவர், யாருக்கு பிரதமர் பதவி என்ற முட்டல்களும் மோதல்களும் நிச்சயம் வரும் என்பதால், இந்த கோதாவில் இறங்க காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளும் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளும் தயாராக இல்லை.
நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனித்து மிக அதிகபட்ச இடங்களில் வெல்வது, யாருக்கும் பெரும்பான்மை இல்லாத சூழல் வந்தால், எம்பிக்களின் எண்ணிக்கையை வைத்து அதிகபட்சமான ஆதாயத்தைப் பெறும் வகையில் (பிரதமர் பதவியைப் பிடிப்பது உள்பட) அரசியல் செய்வது என்ற முடிவில் தான் பெரும்பாலான கட்சிகள் உள்ளன.












Click it and Unblock the Notifications